நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொழுந்துவிட்டு எரிந்த ஆட்டுக்கொட்டகை: 15 ஆடுகள் தீயில் கருகிப் பலி

மாச்சாங்:

கிளாந்தான் மாநிலத்தின் மாச்சாங், கம்போங் டோக் போக் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ஆட்டுக்கொட்டகை ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. 

இந்தச் சம்பவத்தில் கொட்டகையினுள் இருந்த 15 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. அதிகாலை 2 மணியளவில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது, தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொட்டகைக்கு அருகிலுள்ள கடையில் பணியாற்றும் முஹம்மத் அலிப் ஹக்கிம் என்பவர் கூறுகையில், ஆடுகள் வழக்கத்திற்கு மாறாகச் சத்தமிட்டதைக் கேட்டுத் திகைத்ததாகவும், அதற்குள் அவரது நண்பர் கொட்டகை எரிவதைக் கண்டு கூச்சலிட்டதாகவும் தெரிவித்தார். 

தீ அதிவேகமாகப் பரவியதால், ஆடுகளைக் காப்பாற்ற இயலவில்லை என்றும், உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த விபத்தில் 15 ஆடுகள் உயிரிழந்த நிலையில், இரண்டு ஆடுகள் மட்டும் உயிர் தப்பின. இதன் மூலம் சுமார் RM10,000 ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துக்கான ஆரம்பக்கட்ட விசாரணையில், கொசுக்களை விரட்டுவதற்காக மாலையில் மூட்டப்பட்ட நெருப்பின் எஞ்சிய தணல் துண்டுகளே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. வழக்கமாக உரிமையாளர் நெருப்பை அணைத்துவிட்டுச் செல்வார் என்றாலும், தற்போது நிலவும் கடும் வெப்பம், காய்ந்த புற்கள் காரணமாக, அணையாத தணல் மீண்டும் தீயாகப் பரவி விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து வந்த மாச்சாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தினர், அதிகாலை 2.08 மணியளவில் அணைப்புப் பணிகளைத் தொடங்கி 3.54 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோடைக்காலத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் நெருப்புப் பயன்பாட்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset