நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.எல்.சி.சி-யில் புகைப்படத் தரகர்களின் அட்டகாசம்: 18 நபர்கள் கைது

கோலாலம்பூர்:

மலேசியாவின் அடையாளமாகத் திகழும் கே.எல்.சி.சி இரட்டைக் கோபுர வளாகத்தில், உரிமம் பெறாமல் புகைப்படச் சேவைகளை வழங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு செயல்படும் இத்தகைய 'புகைப்படத் தரகர்கள்', பொது இடங்களின் அமைதியைக் குலைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த 16 ஆண்டுகளாகக் கோலாலம்பூரில் வசித்து வரும் சே முஹம்மத் அசுவான் என்பவர் கூறுகையில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது இந்தப் புகைப்படத் தரகர்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பிரேசிலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தோமஸ் அசிவேடோ, இது போன்ற சேவைகள் பல நாடுகளிலும் இருந்தாலும், அவை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

வாடிக்கையாளர் சம்மதம் இன்றி அவர்களை வற்புறுத்துவது தவறான புரிதல்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாதுகாப்புக்காக வேலிகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் அந்த இடத்தின் அழகைப் பாதிக்கும் என்றும், எனவே முறையான கண்காணிப்பு மட்டுமே இதற்குத் தீர்வாகும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.எல்.சி.சி வளாகத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 18 நபர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பொது இடங்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

புகைப்படக் கலைஞர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அந்தப் பகுதியில் நிரந்தரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது காவல்துறை இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகக் கையாண்டு வரும் நிலையில், உரிமம் இல்லாத தொழில்களைப் பொது இடங்களில் அனுமதிப்பது நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset