நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் சுட்டெரிக்கும் 40 டிகிரி வெயில்: மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

கோலாலம்பூர்:

மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள கோத்தா செட்டார், போகோக் சேனா, பெண்டாங், பாலிங் ஆகிய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 'இரண்டாம் கட்டத்தை' எட்டியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று அதிகாலை நிலவரப்படி, இப்பகுதிகளில் தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இந்த அதீத வெப்ப அலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள 12 இடங்கள் 'முதலாம் கட்ட' வெப்ப எச்சரிக்கை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கெடாவின் சிக், பாடாங் தெராப், குபாங் பாசு, லங்காவி உள்ளிட்ட இடங்களிலும், பினாங்கு, பெர்லிஸ், பேராக் மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை குறைந்தது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறண்ட, வெப்பமான சூழலால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்கவும், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

தற்போதைய வானிலை நிலவரம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடுமையான சூரிய வெப்பத்தின் காரணமாக ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனச் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset