நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி முதலீட்டுத் திட்டம்: RM300,000 ரிங்கிட்டுக்கும் மேல் இழந்த 61 வயது பெண்மணி

குவாந்தான்:

பஹாங் மாநிலத்தின் குவாந்தான் நகரில், 61 வயதுடைய ஓய்வூதியதாரர் ஒருவர் போலி முதலீட்டுத் திட்டத்தில் ஏமாந்து சுமார் RM3,37,457 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார். 

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சமூக வலைதளத்தில் பார்த்த விளம்பரம் ஒன்றின் மூலம் இந்த மோசடி கும்பலுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

வெறும் 300 ரிங்கிட் முதலீடு செய்தால் 14,000 ரிங்கிட் வரை லாபம் ஈட்டலாம் என்ற கவர்ச்சிகரமான ஆசையை நம்பி அவர் இந்தப் பொறியில் விழுந்துள்ளார்.

மோசடி கும்பலின் அறிவுறுத்தலின்படி, கடந்த ஜனவரி 30 முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 16 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் 38 முறை அவர் பணப் பரிமாற்றம் செய்துள்ளார். 

வாட்ஸ்ஆப் செயலி வழியாக மட்டுமே தொடர்பிலிருந்த அந்த மர்ம நபர்கள், எவ்வித அதிகாரப்பூர்வ தளமும் இன்றி அவரிடம் பணத்தைப் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்மணி தனது சேமிப்புப் பணம் மட்டுமின்றி, தனது தங்க நகைகளை அடகு வைத்தும் இந்தப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.

முதலீடு செய்ததற்காக வெறும் 392 ரிங்கிட்டை மட்டும் லாபமாகத் திருப்பி அளித்த அந்த கும்பல், பின்னர் லாபத்தைப் பெறுவதற்கான கட்டணம் என்ற பெயரில் மேலும் 2,10,500 ரிங்கிட்டைச் செலுத்துமாறு கேட்டுள்ளது. 

இதில் சந்தேகமடைந்த அந்தப் பெண்மணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்துப் பேசிய பஹாங் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஒத்மான், பொதுமக்கள் எவ்வித முதலீட்டையும் செய்யும் முன் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என்று வலியுறுத்தினார்.

மேலும், அறிமுகமில்லாத வங்கி கணக்குகளுக்குப் பணம் அனுப்பும் முன் ராயல் மலேசியக் காவல்துறையின் 'செமாக் மூலே' (Semak Mule) இணையதளத்தில் சரிபார்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

ஒருவேளை யாராவது இத்தகைய மோசடிகளில் சிக்கினால், உடனடியாக 997 என்ற தேசிய மோசடி எதிர்ப்புப் பதில் மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420-ஆவது பிரிவின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset