நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெனிங்காவில் துயரம்: மாயமான 10 வயது சிறுவன் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு

கெனிங்காவ்:

சபா மாநிலத்தின் கெனிங்காவ், சிகாபோன் ஆற்றுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் உணர்ந்த கடும் துர்நாற்றம், ஒரு வாரமாகத் தேடப்பட்டு வந்த சிறுவனின் எலும்புக்கூடு கண்டறியப்படக் காரணமாகியுள்ளது. 

நேற்று மாலை 4.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு, கடந்த மார்ச் 24-ஆம் தேதி சூக், பகாலான் ஆற்றில் விழுந்து மாயமான 10 வயது சிறுவன் முஹம்மத் அய்டான் ரித்வான் அப்துல்லாஹ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, தனது 60 வயது தாத்தா உடன் படகைச் சரிபார்க்கச் சென்றபோது, இருவரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அடுத்த நாளே தாத்தாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் தற்போது அவனது எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காடுகளில் வாழும் விலங்குகள் சிறுவனின் உடலைச் சிதைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிறுவனின் உடலிலிருந்து மீட்கப்பட்ட எலும்புகள், திசுக்கள் கெனிங்காவ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவிற்குத் மேலாய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வந்த சிறுவனின் தாய், பற்களின் வரிசையை வைத்து அது தனது மகன்தான் என்பதைச் கண்ணீருடன் உறுதி செய்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் குறித்துக் காவல்துறைக் கண்காணிப்பாளர் யம்பில் அனாக் காராய் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆற்றுப் பகுதிகளில் நிலவும் நீரோட்டத்தின் வேகம், ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வார காலத் தேடுதல் வேட்டை தற்போது சோகத்தில் முடிவடைந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset