நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: மலேசியாவின் பல மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவின் பண்டா கடற்பகுதியில் இன்று அதிகாலை 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இதனால் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என மலேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது இந்தோனேசியாவின் அம்போன் நகருக்குத் தெற்கே 467 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 173 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மத் ஹிஷாம் முஹம்மத் அனிப் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்க அச்சுறுத்தல் இல்லாத போதிலும், நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறிப்பாகப் பேராக், சிலாங்கூர், சரவாக் மாநிலங்களின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணம், கிள்ளான், கோலா சிலாங்கூர், கோலா லங்காட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி வரை மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலாக்கா நீரிணை, இந்தோனேசியாவின் புங்குரான் கடல் பகுதிகளில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடல் அலைகள் 3.5 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். 

இது சிறிய படகுகளுக்கு ஆபத்தானது என்பதால் மீனவர்கள், கடற்பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் மலேசியக் கண்காணிப்புப் பகுதிகளில் வெப்பமண்டலச் சூறாவளி உருவாக்கம் ஏதும் தென்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset