நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு அரசு கடும் கட்டுப்பாடு

பேங்காக்:

தாய்லாந்தில் எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தவிர்க்கவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, விலையைத் தவறாகக் கையாளுபவர்கள் அல்லது பொருட்களைப் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் பாட் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 1973-ஆம் ஆண்டின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் இந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காணிப்புப் பணிகளுக்காக வர்த்தகம், எரிசக்தி, காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் என நான்கு முக்கிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் நிலையங்கள், வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் நேரடி ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும், விற்பனையாளர்கள் தங்களின் சில்லறை விலையைத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் இருப்பைக் குறைத்துக் காட்டுவது அல்லது விற்பனையைத் தாமதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், சமையல் எரிவாயு  ஆகியவற்றின் ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த ஏற்றுமதித் தடையின் முக்கிய நோக்கமாகும்.

வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து வரும் வேளையில், பொதுமக்களை விலையேற்றத்திலிருந்து பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் இந்த ஏழு அம்சத் திட்டத்தைத் தாய்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அநீதியான முறையில் லாபம் ஈட்டும் வணிகர்களுக்கு எதிராக மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset