நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேற்காசிய மோதல்: உர இடையூறு உலக உணவு விநியோகத்தில் தாக்கத்தை  ஏற்படுத்தலாம்: WTO

யவுண்டே: 

மேற்காசிய மோதலால் உர விநியோகம் பாதிக்கப்படுவது, விநியோக பற்றாக்குறை, விலை உயர்வு அபாயங்கள் உட்பட உலக உணவு பாதுகாப்பில் தாக்கம் ஏற்படுத்தலாம் என்று உலக வர்த்தக அமைப்பின் (WTO) மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை கிட்டத்தட்ட மூடிவிடும் நிலைக்கு வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன, இதனால் எண்ணெய், எரிவாயு, உரம் போன்றவற்றின் கப்பல் போக்குவரத்துக்கான முக்கியமான வழி பாதிக்கப்படுகிறது.

உலகின் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு உர விநியோகம் வழக்கமாக இந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது. இந்த இடையூறு உலக உணவு உற்பத்தியில் ஏற்படும் விளைவுகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

WTO துணை இயக்குநர் ஜீன்-மேரி பாகம், தற்போது உரம் மிகவும் கவலையளிக்கும் பிரச்சினையாக இருப்பதாக கூறினார்.

"உர விநியோகம் குறைந்தால், அது உற்பத்தி அளவை மட்டுமல்ல, விலையையும் பாதிக்கும்" என்று அவர் யவுண்டேயில் AFP-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டும் விளைச்சல் குறைந்து, விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் போது இந்தத் தாக்கம் அடுத்த ஆண்டிலும் நீடிக்கலாம் என்று அவர் கூறினார்.

வளைகுடா பகுதியில் அதிக அளவு இருக்கும் இயற்கை எரிவாயு, வேதி உரம் உற்பத்திக்கான இன்றியமையாத மூலப்பொருள் ஆகும். இதனால் அந்தப் பகுதி உலகின் முக்கிய உர உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. எனினும், யுத்தத்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தாய்லாந்து, பிரேசில் போன்ற முக்கிய உணவு ஏற்றுமதி நாடுகள், நைட்ரஜன் அடிப்படையிலான உரமான யூரியா பெறுவதற்கு வளைகுடா பகுதியைச் சார்ந்துள்ளன. இதனால் அந்த நாடுகள் விநியோக இடையூறுகளுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளன.

தொடர்ந்து, யுத்தம் தொடங்கி சில வாரங்களே ஆவதால், தற்போது உர பற்றாக்குறை ஏற்படவில்லை என்று பாகம் தெரிவித்தார்.

"ஆனால் வளைகுடா பகுதியிலிருந்து உர விநியோகத்தை அனுப்ப முடியாவிட்டால், அடுத்த ஆண்டு அறுவடை செய்யப்படும் பயிர்களுக்கான நடவு பருவம் தொடங்கும் போது முக்கிய உற்பத்தி நாடுகளில் விநியோகத்தில் நேரடி தாக்கத்தை காண்போம்" என்று அவர் கூறினார்.

ஹோர்முஸ் நீரிணை மூன்று மாதங்கள் தடைபட்டால் அதன் தாக்கம் மிகவும் பாரியதாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

உணவு இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்று பாகம் கூறினார்.

கோவிட்19 தொற்றுநோய் உச்சத்தில் சர்வதேச வணிக இடையூறுகள் ஏற்பட்டபோது நாடுகள் பெரிய அளவில் சேமித்து வைக்கத் தொடங்கியது போல் நடந்தால் நிலைமை மேலும் மோசமாகலாம்.

கோவிட் 19 தொற்றுநோய் உலகளாவிய பசி ஒழிப்பு முயற்சிகளை முன்னர் பாதித்தது. அதற்கு பிறகு, 2015-ல் ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்ட இலக்குகளில் ஒன்றான 2030-ல் பசியை ஒழிக்கும் இலக்கை நோக்கி உலகம் மீண்டும் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தது.

"எனினும் மேற்காசிய யுத்தத்தால் எழும் அபாயங்களால், உலகம் மீண்டும் அந்த பாதையிலிருந்து விலகிவிடும் சாத்தியக்கூறு உள்ளது" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset