நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதாபிமானத்தின் உச்சம்: ஜொகூரிலிருந்து கோலாலம்பூருக்கு சிறுநீரகங்களை கொண்டு சேர்த்த தீயணைப்புத் துறை

குளுவாங்: 

ஜொகூர் மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகங்களை, உரிய நேரத்தில் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறை திங்கட்கிழமை அன்று சிறப்பு 'மெர்சி ஃபிளைட்' (Mercy Flight) நடவடிக்கையை மேற்கொண்டது. தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மனிதாபிமானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் குடும்பத்தினர், அவரது சிறுநீரகங்களைத் தானம் செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து, அந்த உறுப்புகளைப் பாதுகாப்பாகவும் வேகமாகவும் கொண்டு செல்ல தீயணைப்புத் துறையின் வான்வழிப் பிரிவு களமிறக்கப்பட்டது. 

ஒன்பது பணியாளர்களைக் கொண்ட குழுவினர், ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 கிலோ எடை கொண்ட மருத்துவக் கருவிகள், மருத்துவக் குழுவினருடன் ஜாலான் கோத்தா திங்கி மேல்நிலைப் பள்ளித் திடலில் இருந்து சுபாங்கிற்குப் புறப்பட்டனர்.

மருத்துவ ரீதியாக 'மெடெவாக்' (MEDEVAC) என வகைப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, உறுப்புகள் செயலிழக்கும் முன்பே அவற்றைச் சென்றடையச் செய்ய வேண்டும் என்ற இலக்கோடு மிகத் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டது. 

இதன் மூலம் கோலாலம்பூர், செலாயாங் மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சும் தீயணைப்புத் துறையும் இணைந்து ஆற்றிய இந்தச் சேவை, ஒரு உயிரைக் காப்பதில் அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset