நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேச ஒத்துழைப்பால் மாபெரும் வெற்றி; 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: டத்தோ ஹுசைன் ஒமார் கான்

கோலாலம்பூர்:

மலேசியாவின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN), பல்வேறு சர்வதேசப் பாதுகாப்பு முகமைகளுடன் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில், கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. 

மொத்தம் 1,76,700 கிலோகிராம் எடையுள்ள பல்வேறு வகை போதைப்பொருட்கள் இந்த நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன.

மலேசியாவின் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகம் (DEA), ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை (AFP), சீனாவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் (NNCC), தாய்லாந்து, ஹாங்காங், தென் கொரியா போன்ற நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மொத்தம் 34 வெற்றிகரமான கூட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஒருங்கிணைந்த முயற்சியானது, எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சோதனைகளில் மெத்தாம்பெட்டமின், ஹெராயின், கெட்டமைன், கொகேயின், கஞ்சா உள்ளிட்ட பல வீரியம் மிக்க போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

குறிப்பாக, தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து 1,200 கிலோகிராமிற்கும் அதிகமான மெத்தாம்பெட்டமின் கைப்பற்றப்பட்ட வேளையில், தென் கொரியப் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சுமார் 9,420 கிலோகிராம் கொகேயின் பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் பெரும் அளவிலான ஃபென்டானில் சிட்ரேட் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளுடனான இத்தகைய வலுவான உறவு, தகவல் பரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முற்றாகத் தகர்க்கப் பெரிதும் உதவுவதாக டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இளைய சமூகத்தைப் போதைப்பொருள் அரக்கனிடமிருந்து காக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனத் துறை ரீதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset