செய்திகள் மலேசியா
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
சரவாக் மாநிலத்தில் வெள்ளப் பிரச்சினை, குடிநீர் விநியோக சிக்கல்கள் தொடர்பாக உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது அந்த மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்காக, தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், எரிசக்தி, நீர் மாற்றம் அமைச்சகம் (PETRA) ஆகியவை முழுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கான பெரும்பாலான திட்டங்களுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று கூச்சிங்கில் சரவாக் முதலமைச்சர் தான் ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒப்பெங், மாநில அரசின் தலைமைத்துவத்துடன் நடைபெற்ற சந்திப்பில் அன்வார் இதனை தெரிவித்தார்.
“அந்தக் கூட்டத்தில் சரவாக் மக்களின் நலன்களைச் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள், மாநில பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகள், கூட்டாட்சி, மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்துபேச்சு வார்த்தைகள் எழுந்தன.
“மேலும் சரவாக்கில் வெள்ளம், குடிநீர் விநியோகப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்து எனக்கு விளக்கம் வழங்கப்பட்டது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இந்தச் சந்திப்பு நாடு முழுவதும் மாநில அரசுகளுடன் நடைபெற்று வரும் உரையாடல் தொடரின் ஒரு பகுதியாகும் என்றும், நாட்டின் வளர்ச்சியானது மக்களின் தேவைகளைக் கேட்பதிலிருந்தே தொடங்க வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அன்வார் கூறினார்.
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அப்பால், மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல் தொடர்பான சமீபத்திய நிலவரங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார். அதில் வளைகுடா பிராந்தியத்தின் சில நாடுகளின் தலைவர்களுடனும் ஈரான், துர்க்கி தலைவர்களுடனும் நடைபெற்ற கலந்துரையாடல்கள் அடங்கும் என்றார் அவர். தற்போதைய நிலைமை குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள அவர்கள் மலேசியாவை தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச அரங்கில் மலேசியா ஒப்பீட்டளவில் சிறிய நாடாக இருந்தாலும், அதன் கருத்துகளைக் கேட்க அந்த நாடுகள் முன்வந்தது ஒரு மரியாதையாகும் என்றும் அவர் கூறினார்.
“உலக அமைதிக்காக பதற்றத்தைக் குறைக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியபடியே, மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சில கருத்துகளை நான் பகிர்ந்தேன்,” என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 10:34 am
சுக் நெடுஞ்சாலையில் டோல் சாவடியை லோரி மோதியதில் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்
May 1, 2026, 10:16 am
மனிதாபிமானப் பணியில் முட்டுக்கட்டை: காசா உதவிக்கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்
April 30, 2026, 11:44 pm
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
April 30, 2026, 11:42 pm
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 6:09 pm
