நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனுதாபத்தை அறுவடை செய்யும் வெளிநாட்டவர்கள்: கோலாலம்பூர் சுற்றுலாத் தலங்களில் போலி அகதிகள்

கோலாலம்பூர்: 

தலைநகரின் புக்கிட் பிந்தாங், ஜாலான் ஹாங் துவா, ஜாலான் பெட்டாலிங் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஒரு கும்பல் திட்டமிட்டு பிச்சையெடுத்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 

குறிப்பாக, இவர்கள் தங்களைப் 'பாலஸ்தீன அகதிகள்' என்று பொய்யாக அடையாளப்படுத்திக் கொண்டு, மலாய், ஆங்கிலம், சீன மொழிகளில் எழுதப்பட்ட வாசக அட்டைகளை ஏந்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர்.

சிறு குழந்தைகளையும், கைக்குழந்தைகளையும் சாலையில் பிச்சை எடுக்க அமர வைத்து இவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர். செய்தியாளர்கள் இவர்களை அணுகியபோது, இவர்கள் ஆங்கிலம் புரியாதது போல் நடித்ததுடன், முகத்தை மறைத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். 

இவர்கள் உண்மையில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைந்து, பிச்சையெடுத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் உள்ளூர் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய கிழக்கு நாட்டவர் மட்டுமின்றி, ரோஹிங்கியா அகதிகள், சில உள்ளூர் நபர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் ஒரு பகுதியிலும், இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் சந்தைகளிலும் இவர்கள் குழுக்களாகப் பிரிந்து செயல்படுகின்றனர். 

இத்தகைய ஏமாற்று வேலைகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset