நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொறாமை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது

குளுவாங்: 

பொறாமை காரணமாக மனைவியை கத்தியால் கழுத்து அறுத்து கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது வேலை இல்லாத நபர் இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஈ ஜீன் யீ என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது, நீதிபதி முஜிப் சரோஜி முன்னிலையில் மேன்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றப்பத்திரிகையின்படி, கடந்த மார்ச் 4 இரவு 9.31 மணியளவில், தாமான் முஹிப்பா பகுதியில் உள்ள வீட்டில் 48 வயதான தனது மனைவியின் கழுத்து, கை, தோள்பகுதிகளில் கத்தியால் காயப்படுத்தி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் குற்றச் சட்டம் பிரிவு 307இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் நூர் ரமிசா ரஸாலி வழக்கை முன்னிலை வகித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் இல்லை.

மேலும், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்றும், அவரை ஜொகூர் பாருவில் உள்ள பெர்மாய் மருத்துவமனைக்கு மனநல பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கோரியது.

அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 10க்கு நிர்ணயித்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset