நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் போர் தீவிரமாகும் என ஆஸ்திரேலியா எதிர்பார்ப்பு: மத்திய கிழக்கு தூதரகங்கள் சில மூடப்பட்டன

சிட்னி: 

மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சம் நிலவுவதால், ஆஸ்திரேலியா அபூதாபி, தெல் அவிவில் உள்ள தனது தூதரகங்களையும், துபாயில் உள்ள தனது துணைத் தூதரகத்தையும் மூடியுள்ளதாக அதன் வெளிநாட்டு அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள குறைந்தது ஒன்பது நகரங்கள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை அனுபவித்துள்ளன என்று வெளிநாட்டு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.

“அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் பழிவாங்கும் தாக்குதல்கள் இதுவரை நாம் காணாத அளவிலும் ஆழத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மோதல் “எதிர்காலத்தில் மேலும் தீவிரமடைந்து தொடரும் வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் கூறினார்.

“அபூதாபி, துபாய், டெல் அவிவில் உள்ள எங்கள் பணியகங்கள் கடந்த வாரத்தில்  மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.”

மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலில் பணிபுரியும் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அந்த நாடுகளை விட்டு வெளியேறும்படி ஆஸ்திரேலியா உத்தரவிட்டுள்ளது.

“ஈரான் மேற்கொள்ளும் ஆபத்தான, நிலைதடுமாறச் செய்யும் தாக்குதல்கள் பொதுமக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. இதில் ஆஸ்திரேலியர்களின் உயிர்களும் அடங்கும். வர்த்தக விமான சேவைகள் குறைந்த அளவில் மீண்டும் தொடங்கும் நிலையில், பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு உதவுவதற்காக நாங்கள் தூதரக சேவைகளை விரிவுபடுத்தி வருகிறோம்,” என்று வோங் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் இருந்து இதுவரை 23 வர்த்தக விமானங்கள் மூலம் 3,200-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளனர். மோதல் தொடங்கிய போது அந்தப் பகுதியில் சுமார் 115,000 ஆஸ்திரேலிய குடிமக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset