செய்திகள் உலகம்
தெஹ்ரானில் நச்சு ‘கருப்பு மழை’: ஐ.நா. எச்சரிக்கை
ஜெனீவா:
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் தற்போது அந்தப் பிராந்தியத்தின் முழுவதும் மக்களின் வாழ்வைப் பாதித்து வருகிறது. எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய நச்சுத்தன்மை கொண்ட ‘கருப்பு மழை’, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகள் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) மனிதாபிமான அமைப்பு நேற்று தெரிவித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் ரவீனா ஷம்தாசானி, அமெரிக்க, இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் களஞ்சியங்களைத் தாக்கியதன் பின்னர் காற்றில் பரவியுள்ள நச்சு மாசுபாடு சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் ‘சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கை, அளவுத்தகுதி கடமைகள் பூர்த்தி செய்யப்பட்டதா என்ற கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன’ என்றார் அவர்.
மேலும் தாக்குதலுக்குள்ளான அந்த இடங்கள் ‘முழுமையாக இராணுவப் பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தோன்றவில்லை’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பின் (WHO) பேச்சாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெயர், இந்த தாக்குதலுக்குப் பிறகு தெஹ்ரானில் ஏற்பட்ட ‘கருப்பு மழை’, ‘அமில மழை’ ஈரான் மக்களுக்கு உண்மையிலேயே ஆபத்தானது என்று எச்சரித்தார்.
“நாங்கள் மருத்துவமனைகளுடனும் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்கிறோம். எண்ணெய் களஞ்சியங்கள் மீது தாக்குதல் நடந்ததையடுத்து, குறிப்பாக மக்கள் கட்டிடங்களுக்குள் தங்கியிருக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் அறிவுரை வெளியிட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
பஹ்ரைன், சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கட்டமைப்புகள் மீதும் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுவது ‘பிராந்திய அளவில் மேலும் பரவலான மாசுபாடு வெளிப்பாட்டை’ குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்றார் அவர்.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல்கள், வெளியேற்ற உத்தரவுகளால் 100,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக லெபனானில் உள்ள ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் (UNHCR) பிரதிநிதி கரோலினா லிண்ட்ஹோம் பில்லிங் தெரிவித்தார். இதனால் இதுவரை இந்த மோதலால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 700,000 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் (WFP) கீழ் செயல்படும் ஊட்டச்சத்து, உணவு பகுப்பாய்வு சேவைகள் இயக்குநர் ஜீன்-மார்டின் பவுயர், ஹோர்முஸ் நீரிணை, ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியின் வெளியே உள்ள பாப் எல்-மண்டெப் நீரிணையில் ஏற்பட்ட மோதல்களின் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கியமான இரண்டு கடற்சாலைகளான இவை ஆபத்து, கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது சேவை பாதைகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், போருக்கான அபாயக் காப்பீடு தேவைப்படுவதால், ஆபத்தான பகுதிகளில் ஒவ்வொரு கொண்டெய்னருக்கும் கூடுதலாக அமெரிக்க டாலர் 2,000 முதல் 4,000 வரை செலவாகும் என்றும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 5:36 pm
உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரானுக்கு அழைப்பு: டொனால்ட் டிரம்ப்
March 11, 2026, 5:14 pm
ஈரான் போர் தீவிரமாகும் என ஆஸ்திரேலியா எதிர்பார்ப்பு: மத்திய கிழக்கு தூதரகங்கள் சில மூடப்பட்டன
March 11, 2026, 5:05 pm
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் விழுந்ததில் இந்தியர் உட்பட நால்வர் காயம்
March 11, 2026, 4:29 pm
மோஜ்தபா கமெனி பாதுகாப்பாக உள்ளார்
March 11, 2026, 3:37 pm
எரிசக்தி நெருக்கடி: பாகிஸ்தானின் தீவிர நடவடிக்கை
March 11, 2026, 2:47 pm
ஈரான் யுத்த நிறுத்தத்தை கோரமாட்டாது
March 11, 2026, 11:39 am
