நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

கோலா பிலா:

நெகிரி செம்பிலான், ஜொஹோல் பகுதியிலுள்ள கம்போங் செகின்யேஹில் நேற்று இரவு தனது தாயைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண், விசாரணைக்காக வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தற்போது கோலா பிலாவில் உள்ள துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் (HTAN) அனுமதிக்கப்பட்டு மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்று கோலா பிலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுபரிண்டெண்ட் முஸ்தஃபா ஹுசைன் கூறினார்.

“மருத்துவர் அவரை சிகிச்சையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளதால் மருத்துவமனையிலேயே அவருக்குத் தடுப்பு காவல் அனுமதி கோரப்பட்டது .

நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சம்பவம் நடந்த வீட்டிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை, மனநலப் பிரச்சினைகள் காரணமாக அவரிடமிருந்து முழுமையான வாக்குமூலம் பெற முடியவில்லை.

அவரது கூற்றுகள் முரண்பட்டவையாகவும், அடிக்கடி மாறுபடுவதோடு, மாயக்காட்சிகளைக் காண்பது போல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விசாரணையை முழுமைப்படுத்த சிறிது காலம் எடுக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவரின் சொந்த மகளான சந்தேக நபர் முன்பு திருமணம் செய்து கொண்டவர் என்றும், அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்றும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டி தற்போது சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் (HTJ) சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset