நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இரு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு

கிள்ளான்:

14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்கும், உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்கும் இரண்டு நண்பர்கள் வெள்ளிக்கிழமை இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விற்பனை நிர்வாகியாக பணியாற்றும் முஹம்மத் இர்ஃபான் முஹம்மது (25), அரசு உயர்க்கல்விகூடத்தில் (IPTA) பயிலும் அஹ்மத் ஹம்ஸி அலியாஸ் (25) ஆகியோர், நீதிபதி சித்தி அமினா கஸாலி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டபோது, குற்றம் செய்யவில்லை என தெரிவித்தனர்.

முஹம்மத் இர்ஃபான், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், புன்ச்சாக் ஆலாமில் உள்ள ஒரு வாடகை வீட்டின் அறையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக இந்தச் செயலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அதேபோல் அஹ்மத் ஹம்ஸியும் பிப்ரவரி 7 ஆம் தேதி காலை 5.30 மணியளவில், அதே இடத்தில், அதே சிறுமிக்கு எதிராக இதே குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

திருமணமாகாத அவ்விருவரும் குற்றவியல் சட்டம் பிரிவு 376(1), 2017 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும்.

முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் நூருலியானா ஐமி, இரு குற்றவாளிகளுக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என கோரினார். இருப்பினும், நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடிவு செய்தால், ஒவ்வொருவருக்கும் தலா RM20,000, ஒருவரை ஜாமீன்தாரராக நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.

மேலும், மாதம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், பாதிக்கப்பட்டவரையோ அல்லது சாட்சிகளையோ தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளையும் முன்வைத்தார். இந்த வழக்கில் துணை அரசு வழக்கறிஞர் நூரைன் ஷஃபீகீன் முஹம்மத் ரோஸியும் கலந்து கொண்டார்.

முஹம்மத் இர்ஃபான் சமீபத்தில் தான் வேலைக்கு சேர்ந்திருப்பதாகவும், மாத வருமானம் RM2,400 மட்டுமே என்றும், கிளந்தானில் உள்ள தனது குடும்பத்தைப்  பராமரிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறி, ஜாமீன் தொகையை குறைக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் முஹம்மத் சஃப்வான் சாலே கேட்டுக்கொண்டார்.

மேலும், IPTA மாணவரான அக்மத் ஹம்ஸியும் பயிற்சி மேற்கொண்டு வருபவராகவும், B40 குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பதால், குறைந்த ஜாமீன் தொகை வழங்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞரான பார்த்திபன் கோரியுள்ளார்.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி சித்தி அமினா இருவருக்கும் ஜாமீன்தாரருடன் முஹம்மத் இர்ஃபானுக்கு RM8,000, அக்மத் ஹம்ஸிக்கு RM7,000 ஜாமீன் தொகையுடன் அரசுத் தரப்பு கோரிய கூடுதல் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் நிர்ணயித்தது. – பெர்னாமா

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset