செய்திகள் சிந்தனைகள்
பெர்மிமில் நடப்பது என்ன? துவக்கப்பட்ட நோக்கத்தை விட்டு பெர்மிம் விலகிச் செல்கிறதா?
கோலாலம்பூர்:
வரலாற்று சிறப்புமிக்க பெர்மிம் பேரவையின் ஆண்டுக்கூட்டம் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் எதிர்வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாசா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இது தேர்தல் ஆண்டாகையால் கடந்த சில நாட்களாக பெர்மிம் பேரவை ஆண்டுக்கூட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.
1973 ஆம் ஆண்டு உருவான PERMIM, இந்திய முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை, கல்வி முன்னேற்றம், அமைப்புசார் வலிமை என்பவற்றை இலக்காகக் கொண்டு பிறந்த ஒரு கனவு.
அந்தக் கனவின் விதை விதைத்தவர்கள் டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் அவர்களும், அல்லாஹ்யார்ஹம் டான் ஸ்ரீ உபைதுல்லா அவர்களுமாவர்.
அதன்பிறகு இணைந்து கொண்டவர் அல்லாஹ்யார்ஹம் லாயர் டத்தோ இஸ்மாயில் ஷரீஃப் அவர்கள். இளம் வயதில், “இது தேவையா?” “வேறு நல்ல காரியங்கள் செய்யலாமே?” என்ற கேள்விகளை எதிர்கொண்டபோதும், அவர்கள் தளரவில்லை. நம் சமூகத்தில் உயர்கல்வி பெறும் வாய்ப்பு மிகக் குறைவாக இருந்த காலத்தில், தங்களின் தனிப்பட்ட முன்னேற்றத்தை ஒதுக்கி வைத்து, சமூக முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி அவர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய அவர்களது குழுவினரும் புரிந்த தியாகம் பெர்மிம் பேரவையின் அஸ்திவாரமாகும்.
PERMIM ஒரு கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. அதனால் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் இணைப்பு சங்கங்களிடமிருந்து வந்தன. நேரடி உறுப்பினர்கள், பல்வேறு துறைகளில் அனுபவம் கொண்டவர்கள், ஆதரவாக, வழிகாட்டியாக, துணை சக்தியாக செயல்பட்டனர். நிபுணத்துவம் பெற்றவர்கள் சங்கங்களில் இல்லாவிட்டாலும் நேரடியாக உறுப்பினர்களாக்கி அவர்களது திறமைகளை சமூகத்திற்கு பயன்படுத்தலாம் என்று முந்தைய தலைவர்கள் நல்லெண்ணத்தில் நேரடி உறுப்பினர்களை சேர்க்கலாம் என்று முடிவெடுத்து சேர்த்தனர்.
அவர்கள் அதிகாரம் செலுத்துவதற்கு வந்தவர்கள் அல்ல; ஆதரவே அவர்களின் பங்கு. அந்தக் கட்டமைப்பு ஒரு சமநிலையை உருவாக்கியது—அதிகாரம் கீழிருந்து மேலே, ஆதரவு அனைத்துத் திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்தது.
.
ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி எளிமையானது, ஆனால் கடினமானது: நாம் தேடிய ஒற்றுமை எங்கே? இன்று பதவிகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது; கருத்துகளுக்கிடையிலான இடைவெளியும் அதே அளவு பெரிதாகியுள்ளது.
“நான் தலைவர்” என்பதற்கான ஆர்வம், “நாம் ஒன்றாக” என்பதற்கான உற்சாகத்தை மிஞ்சிவிட்டதா?
தலைமை என்பது இருக்கை அல்ல—இணைப்பு. பதவி என்பது வெற்றி அல்ல—பொறுப்பு. சமூகத்தின் நலன் முன்னிலை பெறாத போது, பதவியின் அர்த்தம் காலியாகிவிடுகிறது.
ஒற்றுமை பேசப்படும் மேடைகளில் கூட, நடைமுறையில் பிளவுகள் தென்படுகின்றன என்றால், நம்மை நாமே கேட்க வேண்டிய நேரம் இது.
60க்கும் மேற்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு என்று கூறும் பெர்மிம் பேரவையில் உள்ள அமைப்புகளின் தலைவர்களுக்கு இதனை வழிநடத்த தெரியாதா? தொடர்ந்து ஏன் நேரடி உறுப்பினர்கள் மட்டும் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றார்கள் என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இந்திய முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் இதுகுறித்து விரிவாக பேசி வருகிறார்கள். இது ஆரோக்கியமானதா?
PERMIM உருவான நோக்கம் நினைவில் இருக்கிறதா? கல்வி, ஒற்றுமை, எதிர்காலத் தலைமுறை. அந்த மூன்றையும் மீண்டும் மையமாக்காமல், பதவியை மையமாக்கினால், நாம் எதை வென்றாலும், சமூகத்தை இழந்துவிடுவோம். இன்று நமக்கு தேவை அதிகாரப் போட்டி அல்ல. ஒற்றுமை மட்டுமே.
நேரடி உறுப்பினர்கள் பதவிக்கு வர வேண்டுமானால் தனியாக ஓர் அமைப்பை உருவாக்கி பதிவிலகாவில் பதிந்துகொண்டு அதன்பிறகு பெர்மிமில் இணைந்துகொள்ளட்டும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமை இதனை மனத்தில் கொண்டு செயல்படுமா?
- வழிப்போக்கன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
