நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தைப்பூசத் திருநாள் மலேசிய இந்தியர்களின் தனித்தன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது: அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

இந்தியர்கள், குறிப்பாக உலகத் தமிழர்கள் போற்றி வணங்கும் பெருவிழாவாக தைப்பூசத் திருநாள் விளங்குகிறது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

மலேசியாவில் தைப்பூசத் திருநாள் 19ஆம் நூற்றாண்டுக்கு முன்பதாகவே கொண்டாடப்பட்டு வரும் முக்கிய சமய விழாவாகும். 

நூற்றாண்டுகளை கடந்து, மலேசிய வாழ் இந்தியர்களின் மாபெரும் சமயச் சின்னம் இந்தத் தைப்பூச விழா.

மலேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சமய விழா, மலேசிய இந்துக்களின் உறுதியான சமய நம்பிக்கையையும், ஒழுக்கத்தையும், ஒற்றுமையையும், அன்பினையும் பறைசாற்றும் முக்கிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. 

உள்நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலிருந்து அந்நிய மக்களும் இந்தத் தைப்பூச விழாவிற்கு வந்து முருகனின் அருள் பெறுவதை நம்மால் காண முடிகிறது. 

உலக மக்களுக்கு மலேசியா நல்லதொரு உதாரணமாக விளங்கும் நிலையில், சரித்திரம் அறியாமல், மதத்தையோ, இனத்தையோ சுய விளம்பரத்துக்காக தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழக்கம் கண்டிக்கத் தக்கது ஆகும். 

ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருநாளுக்கு முன்பே பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த ஆரம்பித்துவிடுவது வழக்கம். 

கடந்த வாரம், பத்துமலையில் முன்கூட்டியே காணிக்கைச் செலுத்த வந்த பக்தர்கள் கூட்டம் என்னை பிரம்மிக்க வைத்தது.

பிற நாடுகளில் இல்லாத அளவுக்கு, நமது நாட்டில், தைப்பூச கொண்டாட்டம் பிரமாண்டமாக கொண்டாடப்படுவதற்கு இலக்கவியல் தொழில்நுட்பமும் ஒரு காரணம் என்பதை நம்மால் மறுக்க இயலாது. இலக்கவியல் தொழில்நுட்ப உதவியோடு, இந்தப் பெருவிழாவை மக்கள் நேர்த்தியாக கொண்டாடுவதை என்னால் காண முடிகிறது.

சாலை பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கண்காணிப்பு, டிஜிட்டல் பதாகைகள் வழி அறிவிப்பு, சமூக வலைத்தளங்களின் வழி செய்திகள் பகிர்வு, QR CODE வழி வணிகம் என, தைப்பூசத்தில் மக்களிடையே இலக்கவியல் தொழில்நுட்பம் பரவலாக பயன்பெறுகிறது. 

இன்று பத்துமலையில் பெரும்பாலான சிறு, குறு வணிகர்கள் இலக்கவியல் முறைகளைப் பயன்படுத்தி தங்களது வணிகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. 

இந்த விழிப்புணர்வு தொடர வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset