நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூசம் முன்னிட்டு ஈப்போ நகரில் 10 பிரதான சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்

ஈப்போ:

வரும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஈப்போ நகரப்பகுதியில் உள்ள 10 முக்கிய சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றுப் பாதைகளுக்கு திருப்பிவிடப்படும் என ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர் ACP அபாங் சைனல் அபிடின் அபாங் அஹ்மது தெரிவித்துள்ளார்.

 சுங்கை பாரி, புந்தோங் நகரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து குனோங் செரோவில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் நோக்கி நடைபெறவுள்ள இரத ஊர்வலம் சீராக நடைபெற, இந்தச் சாலை மூடல் நான்கு நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றார் அவர்.

“ஜனவரி 31 (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், சுங்கை பாரியிலிருந்து புறப்படும் இரதம் நண்பகல் 12 மணிக்குள் ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அதேபோல், இரதம் மீண்டும்  ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலிலிருந்து பிப்ரவரி 3 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு புறப்பட்டு, பிப்ரவரி 4 (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணியளவில்  ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை வந்தடையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் இன்று தெரிவித்தார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து ஜாலான் சுங்கை பாரி வழியாக ஜாலான் துன் பேராக், ஜாலான் துன் பேராக்–ஜாலான் லாஹாட், ஜாலான் லாஹாட்–ஜாலான் பெர்ஹெந்தியான், ஜாலான் லாஹாட்–ஜாலான் சுல்தான் யூசோப், ஜாலான் சுல்தான் யூசோப்–ஜாலான் சுல்தான் இஸ்கண்டார், ஜாலான் சுல்தான் இத்ரிஸ் ஷா–ஜாலான் லக்ஸமணா சந்திப்பு ஆகியவை அடங்கும்.

மேலும், ஜாலான் சுல்தான் இத்ரிஸ் ஷா–ஜாலான் ராஜா மூசா அஜீஸ் சந்திப்பு, ஜாலான் டத்தோ ஒன் ஜாஃபர்–ஜாலான் ராஜா மூசா அஜீஸ், ஜாலான் ராஜா மூசா அஜீஸ்–ஜாலான் டத்தோ அஹமத் சைத், ஜாலான் ராஜா மூசா அஜீஸ்–சுல்தான் இஸ்கந்தார் வட்டப்பாதை (Roundabout) ஆகிய சாலைகளும் மூடப்படும்.

இதையடுத்து, பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஜாலான் கோல கங்சார், ஜாலான் துன் அப்துல் ரசாக், ஜாலான் சுல்தான் நஸ்ரின் ஷா, ஜாலான் ராஜா டிஹிலிர், ஜாலான் சி.எம். யூசோஃப், ஜாலான் யாங் கல்சோம், ஜாலான் சுல்தான் அப்துல் ஜலீல் ஆகிய எட்டு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“இந்த ஆண்டு தைப்பூச விழாவில் சுமார் 5 இலட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஈப்போ நகரப்பகுதியில் பயணம் செய்யும் அனைத்து சாலைப் பயனாளர்களும் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

மேலும், தைப்பூசக் காலத்தில் முக்கியச் சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள போக்குவரத்து காவலர்களின் உத்தரவுகளை எப்போதும் கடைப்பிடிக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

- சங்கீர்த்தனா
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset