நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம் 

மும்பை:

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கை விரல்களில் அழியும் மை வைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் மும்பை, புணே உள்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று (ஜன. 15) நடைபெற்றது. மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தத் தேர்தலில் வரலாற்றில் இல்லாத வகையில் 52.94 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

நேற்று காலை நடந்த தேர்தலில் வாக்குப் பதிவின்போது பாரம்பரிய முறைப்படி விரல்களில் மை இடுவதை தவிர்த்துவிட்டு, மார்க்கர் பேனாக்கள் மூலம் மை இடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த மை வைத்தவுடனே அழியக் கூடியதாக இருந்ததாகவும், இதனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்தியில், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பல்வேறு உள்ளாட்சித் தொகுதிகளில் இருந்து மும்பையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, 23 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக பல்வேறு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, அழியக் கூடிய மை வைக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மக்கள் ஜனநாயகம் மீது வைத்திருந்த நம்பிக்கையை தேர்தல் ஆணையம் சரித்து கேள்விக் குறியாக்கியிருக்கிறது. வாக்குத் திருட்டு தேச விரோதச் செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பலரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருக்கும் மாநில தேர்தல் அதிகாரி தினேஷ் வாக்மரே, “2011 ஆம் ஆண்டு முதலே உள்ளாட்சித் தேர்தல்களுக்கு மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த மை அழியாதது” என்றும் கூறியுள்ளார்.

அதேவேளையில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், “எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தில் சாக்கு போக்குகளைக் கூறுவதாகவும், கடந்த காலங்களிலும் மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தியதாகவும்” சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset