நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

12 ஆண்டுகளுக்கும் மேலாக போலி MyKad-ஐ பயன்படுத்திய இந்தோனேசிய ஆடவர் கைது 

மலாக்கா 

வேறொருவரின் அடையாள அட்டை (MyKad) நகலை 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தியக் குற்றத்திற்காக, இந்தோனேசிய குடியுரிமை கொண்ட ஒரு ஆணுக்கு, இன்று ஆயர் கெரோ (Ayer Keroh) மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்டதும், குற்றவாளியின் கருணை மனுவையும் பரிசீலித்து, 47 வயதுடைய அப்துல் அடிக்கு மாஜிஸ்திரேட் நூர் அஃபிகா ராதியாஹ் ஸைனுரின் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

குற்றச்சாட்டின்படி, சட்டப்பூர்வ அதிகாரமோ அல்லது நியாயமான காரணமோ இன்றி, பெர்தாம் மலிம் பகுதியில் வசிக்கும் எடி ஷஹ்ரிசல் அப்துல் கரீம் என்பவரின் பெயரில் உள்ள MyKad நகலை அப்துல் அடி பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி மதியம் 12 மணியளவில், இங்குள்ள மலாக்கா இஸ்லாமிய சமயத் துறை (JAIM) அமலாக்கப் பிரிவில் இந்த குற்றம் வாசிக்கப்பட்ட்தாகக்  கூறப்படுகிறது.

குற்றவாளி, தேசிய பதிவுத்துறை விதிமுறைகள் 1990 (2007 திருத்தம்) இன் விதி 25(1)(e)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.

தேசிய பதிவுத்துறை (JPN) KP10 அடையாள அட்டை பதிவிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள், படங்களை ஒப்பிட்டதில், அவை குற்றவாளியுடன் பொருந்தவில்லை என்றும், அந்த அடையாள அட்டை அவருக்குரியது அல்ல என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நபர் 2023ஆம் ஆண்டு முதல் மலாக்கா வரலாற்று நகர மன்றம் (MBMB) வழங்கிய பெச்சா (beca) ஓட்டுநர் உரிமத்தை பெற்றதுடன், தேசிய தொழில் பாதுகாப்பு, சுகாதார நிறுவனம் (NIOSH) வழங்கிய அடையாள அட்டையையும் பெற்றிருந்தார்.

முன்னதாக தனது கருணை மனுவில், பள்ளி செல்லும் மூன்று குழந்தைகள், மனைவியைப் பராமரித்து வருவதால் தமக்கு இலகுவான தண்டனை வழங்குமாறு குற்றவாளி கோரினார்.

எனினும், இந்த குற்றம் மிகக் கடுமையானது என்றும், இது நாட்டின் பாதுகாப்புக்கும், நிர்வாக நேர்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்க முடியும் என்றும் கூறி, சம்பந்தப்பட்ட அந்த நபருக்குக் கடுமையானத் தண்டனை விதிக்க வேண்டும் என மலாக்கா மாநில தேசிய பதிவுத்துறை (JPN) சார்பில் வழக்குத் தொடர்ந்த அரசு வழக்கறிஞர் முகமது நாஸ்ரோம் முஹம்மது யூசோஃப் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

மேலும், குற்றவாளி 12 ஆண்டுகளுக்கும் மேலாக பிறரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, MBMB பெச்சா உரிமம் பெறுதல் போன்ற குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அனுபவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் குற்றவாளிக்குக் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும் வகையில், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset