நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கள்ள நோட்டுகளை கொடுத்து நகை வாங்க முயன்ற சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்: OCPD அஸ்லி முஹம்மது நூர் 

கோலா திரெங்கானு, 

சபாங் திகா பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில், போலி பணத்தை - கள்ள நோட்டுகளை - பயன்படுத்தி நகை வாங்க முயன்ற ஆடவர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் டிசம்பர் 18 வியாழக்கிழமை அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்தச்  சந்தேக நபர் சுமார் 30 வயதுக்குள் இருப்பவர் என்றும், சம்பவம் அன்று வெள்ளை தொழுகை தொப்பி, கண்ணாடி, இளஞ்சிவப்பு நிற முகக்கவசம் அணிந்து மாலை 3.10 மணியளவில் தனியாகவே கடைக்கு வந்ததாகவும் கோலா திரெங்கானு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (OCPD) உதவி ஆணையர் அஸ்லி முஹம்மது நூர் தனது முதல் கட்ட விசாரணையில் தெரியப்படுத்தினார்.

அச் சந்தேக நபர், விற்பனை உதவியாளரிடம் பல தங்க வளையல்களை காட்டுமாறு கேட்டுக்கொண்டு, அவற்றை தனது மனைவிக்கு காட்டுவதற்காக என்று கூறி புகைப்படங்களும் எடுத்துள்ளார்.

“கடையிலிருந்து இரண்டு முறை வெளியேறி மீண்டும் நுழைந்த பின்னர், அவர் RM30,000 மதிப்புள்ள நகைகளை வாங்க முனைந்தார்.

“36 வயதான விற்பனை உதவியாளர் பணத்தை எண்ணுவதற்காக வழங்குமாறு கேட்டபோது, அந்த நபர் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட பணத்தை எடுத்து கொடுத்துள்ளார் ,” என அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பண நோட்டுகளின் ஓரங்கள் வெள்ளையாக இருப்பதை கவனித்த விற்பனை உதவியாளர் சந்தேகமடைந்து அவற்றைச் சோதிக்க முயன்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக  OCPD அஸ்லி கூறினார்.

தன் திட்டம் வெளிப்பட்டதை உணர்ந்த அந்த நபர், கடையின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கருநீல நிற பெரொடுவா ஆக்சியா (Perodua Axia) காரில் ஏறி தப்பிச் சென்றார்.

“வாகனத்தின் பதிவு எண் போலியானது எனச் சோதனையில் தெரியவந்தது. சம்பவ இடத்திலும் அருகிலுள்ள கடைகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” என அவர் கூறினார்.

நகைகள் எதுவும் எடுத்துச் செல்லப்படாததால் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும், இந்த வழக்கு கள்ள பணத்தை பயன்படுத்திய குற்றம் தொடர்பாக குற்றச் சட்டத்தின் பிரிவு 489Bன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா முருகன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset