நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்

ஈப்போ:

மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியத் தலைவரும், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் (PERTAMA) தேசியத் தலைவருமான டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் 15.11.2025 ல் அதிகாலை இறையடி சேர்ந்தார்.

தனது 14 ஆண்டுகால தலைமைப் பணியின் மூலம் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தை வளர்த்தெடுத்த ஒரு சிறந்த தொண்டராகவும் அவர் வழங்கினார்.

டத்தோ கிருஷ்ணன் அவர்கள் தமிழ்க்கல்விக்காக ஆற்றிய பணிகளில் மிக முக்கியமானது, "தாய்மொழிப் பள்ளிகள் மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை" எனத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையும், மலேசிய சீன மொழிக் கழகமும் (Majlis Bahasa Cina), மலேசியத் தமிழ்நெறிக் கழகம் சேர்ந்து முன்னின்று போராடியதற்கு இறுதிவரை துணை நின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த வழக்கில், தமிழ், சீனப் பள்ளிகளின் சட்டபூர்வமான இடத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தீவிரமாகப் பணியாற்றினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், "முன்னாள் மாணவரே, தமிழ்ப்பள்ளிகளின் அரண்" என்ற முழக்கத்தின் கீழ், நாட்டின் தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளார்.

தமது கடைசி நாட்கள் வரை, தமிழ்ச் சமூகத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றிய டத்தோ கிருஷ்ணன், நேற்று (15.11.2025) பேராக் மாநிலம், ஈப்போவில் நடைபெற்ற சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பின் (PGRM) 2025 ஆண்டு வருடாந்திர விருது விழாவில் கௌரவிக்கப்பட்டார். அந்த விழாவில், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை (PERTAMA)-க்கு 'தமிழ்ப்பள்ளிகளின் காவலர்' சாதனை விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்றுக்கொண்ட நிலையே, பொது வாழ்க்கையில் அவர் கண்ட இறுதி நிகழ்வாக அமைந்தது.

அவர் விட்டுச் சென்றுள்ள தொண்டுப் பணியும், தாய்மொழிக் கல்வியின் உரிமைக்காக ஆற்றிய போராட்டமும், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புமே அவருக்கு என்றென்றும் நிலைத்த நினைவாக விளங்கும் என்று மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை சமர்ப்பணம் செய்துள்ளது.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset