நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: சுப்பாராவ் வேண்டுகோள் 

பினாங்கு:

தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், இந்த ஆண்டு தீபாவளியை நெகிழி இல்லாத பண்டிகையாக கொண்டாடும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

நெகிழி மாசுபாடு நமது சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் மிகவும் பரவலான மற்றும் நயவஞ்சகமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக இந்த நெகிழி இல்லா தீபாவளி பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளரும் என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

இந்த நெகிழி இல்லா தீபாவளி பிரச்சாரத்திற்கு ஆதரவு நல்கிய பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சுந்தராஜு, பினாங்கு தீவின் நகராண்மைக் கழக மேயர் டத்தோ பி.ராஜேந்திரன், பினாங்கு மாநில இந்து சங்க பேரவையின் தலைவர் விவேக ரத்னா ஆ.தர்மன் ஆகியோருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தனது நன்றியை தெர்வித்துக்கொள்வதாக சுப்பாராவ் கூறினார்.

தீபாவளி தீமையை, நன்மையும் இருளை விட ஒளியும் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகிறது.

இன்றைய காலகட்டத்தில், மாசுபாடு இல்லாமல், செயற்கை பொருட்கள், நெகிழிகளைப் பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியைத் தழுவுவதே சவால் என அந்த நால்வரும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

நவீன வாழ்க்கை முறைகள் பெரும்பாலும் தண்ணீர், குளிர்பான நெகிழி பாட்டில்கள், நெகிழி தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், உணவு பேக்கேஜிங் போன்ற ஒற்றைப் பயன்பாட்டுப் பொருட்களின் பயன்பாட்டிலிருந்து அதிக அளவு கழிவுகளை உருவாக்குகின்றன.

தீபாவளி நெகிழிகளால் அல்ல, அன்பால் நிரப்பப்பட வேண்டும்.

அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், இன்றைய சமூகத்தினர் நெகிழி பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.

சில இனிப்பு பலகார விற்பனையாளர்கள் இனிப்புகளை வாங்கும் பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை கோருவதாக புகார் தெரிவித்தனர்.

நெகிழி பாத்திரங்கள், அலங்காரங்கள், பரிசு பேக்கேஜிங் ஆகியவற்றை வேண்டாம் என்று கூறி நெகிழி இல்லாத பண்டிகையைக் கொண்டாடும்படி அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

நெகிழி பைகளுக்கு பதிலாக சணல், துணி போன்ற பைகளை, பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் வீட்டை நெகிழி அலங்காரத்தால் அலங்கரிக்க வேண்டாம் அல்லது நெகிழி மா இலைகளை வாங்க வேண்டாம் என இவர்கள் நினைவுபடுத்துகின்றனர்.

 அதற்கு பதிலாக இயற்கை பச்சை இலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

நெகிழி கொள்கலன்களில் உணவை பரிமாற வேண்டாம் அல்லது நெகிழி கரண்டி, கோப்பைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

வாழை இலைகளில் உணவை பரிமாறவும் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களுக்கு மாறவும்.

இந்த தீபாவளியை புதுமையாக ஆனால் நெகிழி இல்லாத பாரம்பரியத்தை புதுப்பிக்கவும், நிலையான நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவும், நெகிழி இல்லாத உலகத்தை நோக்கி நகர நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நெகிழி இல்லாமல் தீபாவளியை மிகச் சிறப்பான
 ஆரோக்கிய முறையில் கொண்டாடுங்கள் என நான்கு அமைப்புக்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருப்பதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

இந்த நெகிழி இல்லா தீபாவளி துவக்க நிகழ்ச்சியின் போது பினாங்கு  லிட்டல் இந்தியா பகுதியில் தீபாவளிக்கு பொருட்களை வாங்க வந்த பயனீட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் துணிப் பைகள் இலவசமாக தரப்பட்டது. 

இதற்கிடையே தீபாவளி காலக்கட்டத்தில் சமைக்கப்படும் உணவுகளை மிச்சப்படுத்தி இறுதியில் தூக்கி எறியும் பழக்கத்தை பின்பற்ற வேண்டாம் என சுப்பாராவ் நினைவு படுத்தினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset