செய்திகள் கலைகள்
டைம் லூப் கருத்தும் வெங்கட் பிரபுவின் "மாநாடு" திரைப்படமும்: உல்லாஸ் நாயக்
வெங்கட் பிரபு இயக்கத்தில், குழப்பமில்லாத திரைக்கதை அமைப்பில் வந்துள்ள "மாநாடு" திரைப்படம் வெற்றிபெற்றுள்ளதைத் தொடர்ந்து, தமிழ் கூறும் நல்லுலகைச் சேர்ந்த மக்கள் "டைம் லூப்" என்றால் என்ன கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.
டைம் லூப் என்பதை விஞ்ஞான ரீதியாக டெம்பரல் லூப் (Temporal Loop), விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்றெல்லாம் ஆராய்ந்து மண்டை காயாமல், சாதாரணமாகவே இதைப் பார்க்கலாம்.
நேர வளையம் என்று தமிழ்படுத்தப்பட்டுள்ள இந்த டைம் லூப் என்ற கருத்து (concept) கற்பனையாக ஒரு சிறுகதையில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
1941-ம் ஆண்டு மால்கம் ஜேம்ஸன் என்பவர் "டபில்டு அண்ட் ரீடபில்டு (Doubled and Redoubled) என்ற சிறுகதையை எழுதி வெளியிட்டார். இந்தக் கதையில் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள், திரும்பத் திரும்ப ஒருவனுக்கு ரிப்பீட் ஆகும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து அவன் தப்பிக்க, ஒன்று அவன் சாக வேண்டும் அல்லது, அந்த நாள் முடிந்து அடுத்த நாள் வரவேண்டும். இதுதான் இந்த டைம் லூப் சிக்கலுக்கு முடிவு என்று தெரிகிறது.
நம்மில் பலர் வீடியோ கேம்ஸ் விளையாடி இருப்போம். அதில் பொதுவாக, லைஃப்லைன் என்று ஒன்று இருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட லைவ்ஸ் (பிறவிகள்) என்றும் இருக்கும். நாம் ஒரு கற்பனை வீரராக அதில் விளையாடும் போது சர்வ வல்லமை பொருந்திய ஒரு வில்லனையோ அல்லது ஒரு சிக்கலான போட்டியையோ எதிர்கொள்வோம். ஆரம்ப முயற்சிகளில், விளையாடத் தெரியாமல் விளையாடி, நாம் விளையாடும் கற்பனைப் பாத்திரம் அதன் லைஃப்லைன் காலியாகி இறந்து விடும். ஆனால், விளையாட்டு இங்கே முடியாது.
நமக்கு 5 - 6 லைவ்ஸ் (பிறவிகள்) இருக்கும். ஒரு முறை இறந்தவுடன், திரும்பவும் அதே பாத்திரம் மீண்டும் உயிர்த்தெழும். நாம் மறுபடியும் விளையாடுவோம். இந்த முறை சற்று எச்சரிக்கையாக, கடந்த முறை எங்கேயெல்லாம் சிக்கலில் மாட்டிக்கொண்டோமோ, அங்கேயெல்லாம் மாட்டிக்கொள்ளாமல், தப்பித்து விளையாடுவோம். இப்போது, புதுவித சிக்கல் ஏதாவது வந்து மறுபடியும் நாம் விளையாடும் பாத்திரம் பரிதாபமாக இறந்து விடும். மறுபடி ஒரு புதிய பிறவி.
டைம் லூப் கான்ஸெப்ட் கிட்டத்தட்ட இதுதான். இதை வைத்து ஆங்கிலத்தில் ஏராளமான திரைப் படங்கள் வெள்ளிவந்துவிட்ட நிலையில், அங்கேயுள்ள ரசிகர்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே "வாட் தி ஹெக் யார்?" என்று அலுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
நம் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த டைம் லூப் கருத்துள்ள திரைப்படங்கள் மிகவும் குறைவு, காரணம், இந்தக் கருத்தைத் தெளிவாக பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதில் சிரமம் நிறைய உள்ளது.

நான் இன்னும் "மாநாடு" படத்தை பார்க்கவில்லை. ஆனால், சமீபத்தில் "குடி யெடமாய்தே (Kudi Yedamaaithe)" அதாவது "வலது இடமானால்" என்ற பொருளில் ஒரு தெலுங்கு வெப் சீரிஸ் (2020) வந்தது. இதை இயக்கிய பவன் குமார் இதற்கு முன் யூ - டர்ன் (U - Turn), லூஸியா (Luciya) போன்ற புத்திசாலித்தனமான கன்னடத் திரைப்படங்களை இயக்கியவர். இதில், யூ - டர்ன் தமிழ் படமாக வந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
சந்தோஷமான திருமணம் என்பது போல, புத்திசாலித்தனமான கன்னடப் படம் என்பது ஒரு Oxymoron, .புரியாதவர்கள் கூகிளாண்டவரையோ அல்லது dictionary யையோ நாடவும்.
இந்த குடி யெடமாய்தே வெப் சீரிஸில் ஒரு பீட்ஸா டெலிவரி செய்யும் நபருக்கு (நாயகன்) ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப நடக்கும். அவனுக்கு சில சமயம் முந்தைய நிகழ்வுகள் நினைவிருக்கும், சில சமயம் நினைவிருக்காது. இதே சீரிஸில் வரும் ஒரு பெண் இன்ஸ்பெக்டரும் (அமலா பால்) இதே மாதிரியான டைம் லூப்பில் மாட்டிக்கொள்வார். பீட்ஸா டெலிவரி நாயகனும், பெண் இன்ஸ்பெக்டரும் ஒன்று சேர்ந்துகொண்டு இதை முறியடிக்கிறார்களா என்பதே இந்த வெப் சீரிஸின் சாரம்.
மிகவும் சுவையாக எடுக்கப்பட்டு, 8 எபிசோடுகள் (அத்தியாயங்கள்) வந்துள்ள நிலையில் முதல் சீஸன் (பாகம்) முடிந்துள்ளது. இரண்டாவது சீஸனில் என்ன ஆகும் என்று பல ஆர்வமுள்ள பார்வையாளர்கள் விரல் நகங்களைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். பவன் குமார் இயக்கிய இந்த சீரிஸ் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இப்போது தமிழில் இதே டைம் லூப் கருத்தை அறிமுகப்படுத்தியுள்ள வெங்கட் பிரபுவைப் பாராட்ட வேண்டும்.
வெங்கட் பிரபு புத்திசாலி. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் "தல" அஜித் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வந்த "மங்காத்தா" எனக்கு மிகவும் பிடித்த படம்.
திரையுலகிலேயே பலருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சொல்லுகிறேன். மங்காத்தா படம் 1973-ம் ஆண்டு வெளிவந்த The Sting என்ற ஹாலிவுட் (ஆங்கில) படத்தின் தழுவலாகும். இந்த The Sting படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரங்களான ராபர்ட் ரெட்ஃபோர்ட் (Robert Redford) மற்றும் பால் நியூமன் (Paul Newman) ஆகியோர் நடித்திருப்பார்கள். சீட்டு விளையாட்டில் மக்களை ஏமாற்றும் காஸினோவில் (Casino) எப்படி இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை, வெங்கட் பிரபு நம் நாட்டிற்கு ஏற்றவாறு திறமையாக கிரிக்கெட் சூதாட்டம் - Betting - என்று மாற்றி எடுத்திருப்பார். இதில் தல அஜித் மற்றும் அர்ஜுன் இருவரும் மிக அனாயசமாக நடித்திருப்பார்கள். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதில் சந்தேகமில்லை.
வெங்கட் பிரபு மாநாடு, மங்காத்தா போன்ற செரிப்ரல் த்ரில்லர் - Cerebral Thriller - (ரசிகர்கள் சிந்தனையைத் தூண்டும் த்ரில்லர்) படங்களை மேலும் நிறைய எடுக்க வாழ்த்துக்கள்.
- உல்லாஸ் நாயக்
(கட்டுரையாளர் உல்லாஸ் நாயக் தமிழ் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர். விரைவில் முழு நீளத் திரைப்படத்தை இயக்க இருக்கும் நல்ல எழுத்தாளர்.)
தொடர்புடைய செய்திகள்
November 30, 2025, 11:53 am
தமிழ்நாட்டின் இ.எஸ்.பி படத்தின் தொடக்க விழா: டத்தோ ஸ்ரீ சரவணன் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்
November 28, 2025, 8:01 pm
தளபதி திருவிழாவிற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது: உலகளாவிய ரசிகர்கள் மகத்தான ஆதரவு
November 24, 2025, 7:23 pm
பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்: தலைவர்கள் இரங்கல்
November 24, 2025, 3:41 pm
கில் ரீமேக்கிலிருந்து விலகுகிறார் துருவ் விக்ரம்
November 21, 2025, 11:04 pm
டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: மலேசியா வருகிறார் விஜய்
November 19, 2025, 2:48 pm
நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
November 19, 2025, 2:25 pm
திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி அனுமனை அவமதித்துவிட்டார்: வானர சேனா அமைப்பு போலிஸில் புகார்
November 17, 2025, 10:41 pm
நடிகை அதிதி ராவ் பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி: எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்
November 15, 2025, 3:49 pm
குழந்தைகள் நலனுக்கான யுனிசெஃப் தூதரானார் கீர்த்தி சுரேஷ்
November 13, 2025, 9:41 pm
