நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது: பெங்களூரு புகழேந்தி

புதுச்சேரி: 

பாஜகவுடன் செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஜோக்கராகிவிட்டார். பழனிசாமிக்கும் கட்சிகளுக்கும் இடையே போட்டி இல்லை. அவருக்கும் ஆம்புலன்ஸிற்கும் தான் இப்போது போட்டி. அதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி முதல்வர், காமராஜர் வழி வந்தவர். மூத்த தலைவர். புதுச்சேரி மாநில பொறுப்பாளராக ஜெயலலிதாவால் நான் நியமிக்கப்பட்டு ஓம்சக்திசேகருக்கு தேர்தல் பணியாற்றும்போது ரங்கசாமியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் போற்றுதலுக்குரிய தலைவர். புதுச்சேரியின் தந்தையாக உள்ளார். மக்களின் செல்வாக்கை பெற்றவர். ஆகவே மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இப்போது எந்தவித அரசியலும் இல்லை.
 
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி சீரழித்துவிட்டார். தவறான பாதையில் சென்றுவிட்டார். அதிமுகவையே பழனிசாமி முடித்துவிட்டார். அவர் தலைமையிலான அணி நான்கவது இடத்துக்குத்தான் வரும். சீமானுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் போட்டி. அதனை யாருடனும் ஒப்பிட வேண்டாம்.

விஜய் எழுச்சிமிகு மாநாட்டை பார்த்தோம். இளைஞர்கள் கடல் அலையன திரண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. தமிழக முதல்வரை அங்கிள் என்று கூறியதை தவிர்த்திருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை திமுகவுக்கு எதிரணி என்றால் தவெக தான்.

இவ்விரு கட்சிக்கும் தான் போட்டி என்று விஜய் சொன்னது தான் 100 சதவீதம் உண்மை. அதுதான் நடக்கப்போகிறது. பழனிசாமி காலியாகிவிடுவார். தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்டோரின் கட்டவுட்களை விஜய் பயன்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இது வரவேற்கக்கூடியது.

அரசியல் ரீதியாக எங்களுக்கு எதிரி பாஜக, திமுக என்று தெளிவாகவும் அவரது கொள்கையை கூறுகிறார். ஆளும் கட்சியோடு மோதுவது தவறு இல்லை. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் போட்டி என்று திமுக சொல்வதை நான் ஏற்கமாட்டேன். பாஜகவுடன் பயணம் செய்பவர்களை எப்படி திமுக ஏற்றுக்கொள்ள முடியும். எடப்பாடி பழனிசாமி அணி அரசியலில் ஆதரவற்றோராகிவிட்டது.

பழனிசாமி எவ்வளவு தூரம் அரசியல் பயணம் செல்கிறாரோ அவ்வளவும் திமுகவுக்கு சாதகமாக போய்க்கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எழுந்து இனி நிற்கமுடியாது. மக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

இன்னும் 30 நாட்களில் அரசியல் வேறு விதமாக திரும்பும். அதனை இப்போது என்னால் சொல்ல முடியாது. ஒட்டுமொத்தமாக 20 சதவீத வாக்கு வாங்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அது 5 சதவீதம் கூட வராது. அந்த நிலைபாட்டை முக்கியமான ஆளாக நானே எடுக்கப்போகிறேன். அதிமுக தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்.

விஜய் மாநாட்டுக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்தார் என்பது பொய். விஜய், தனியாகத்தான் அந்த மாநாட்டை நடத்தியுள்ளார். ஓபிஎஸ் அரசியல் பயணம் மேற்கொண்டால் அரசியல் மாற்றம் வரும். ஆனால் அவர் செய்வது இல்லை. அதுதான் வருத்தம் அளிக்கிறது. ஓபிஎஸ் தலைவர் என்பதிலும். அவர், ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் என்பதிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

ஓபிஎஸ்ஸை மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால் அரசியல் களத்தில் அவர் ஏதேனும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் யாரும் வரமாட்டார்கள். பாஜக பக்கம் ஓபிஎஸ் செல்லமாட்டார். அப்படிச் சென்றால் அவருடன் யாரும் இருக்க மாட்டார்கள். கவுன்சிலர் சீட்டு கூட வெற்றிபெற முடியாத கட்சியுடன் பயணம் செய்ய விரும்புவது தவறில்லையா?

பாஜகவுடன் செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஜோக்கராகிவிட்டார். பழனிசாமிக்கும் கட்சிகளுக்கும் இடையே போட்டி இல்லை. அவருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தான் இப்போது போட்டி. அதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பழனிசாமி கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- ஆர்யன்

​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset