செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிவகங்கை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜா பெயர் இறந்தோர் பட்டியலில் இருந்ததால் ஆட்சியரிடம் கடும் வாக்குவாதம்
சிவகங்கை:
சிவகங்கை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜாவும் அவரது கணவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல், இறந்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை கண்டித்து அக்கட்சியினர் ஆட்சியரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற டிச.11-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. டிச.16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதையொட்டி, தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இறந்தோர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், இரட்டை பதிவு போன்ற காரணங்களால் நீக்கப்படும் உத்தேச பட்டியல் வாக்குச்சாவடி வாரியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு, ஆட்சேபனைகள் பெறப்பட்டு வருகின்றன.
இதில், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்துஜாவும், அவரது கணவரும், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ரமேஷ் ஆகியோரது பெயர்கள் இறந்தோர் பட்டியலில் இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், தங்களது கட்சியினருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடியை முற்றுகையிட்டு அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:
“ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் சிறப்பு தீவிர திருத்தப் பணி முறையாக நடக்கவில்லை. சில இடங்களில் ஒரு படிவம் மட்டுமே கொடுக்கின்றனர் என்று ஏற்கெனவே புகார் கூறியிருந்தோம். தற்போது நாதக வேட்பாளர், அவரது கணவர் ஆகியோரின் பெயர்களே இறந்துவிட்டதாகக் கூறி, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
எங்களது வேட்பாளர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காகவே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதில் சதி நடந்துள்ளது.
இதேபோல் ஏராளமானோரின் பெயர்கள் வேண்டுமென்ற நீக்கப்படுகிறது” என்று புகார் கூறினர்.
இந்த விவகாரத்தில் பதிலளித்து ஆட்சியர் கூறுகையில், “தற்போது நீக்கப்பட உள்ள உத்தேச பட்டியலை வாக்குச்சாவடி முகவர்களிடம் கொடுத்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த பின்னரே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கட்டாயம் இருவரது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வேறு பெயர்களை தவறாக நீக்கியிருந்தால், ஆதாரங்கள் கொடுத்தால் சரி செய்து தருகிறோம்” என்றார்.
ஆனால், இந்த விளக்கத்தை ஏற்காத நாம் தமிழர் கட்சியினர், தொடர்ந்து ஆட்சியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, தவறு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், முறையாக விசாரணை நடத்தி, நீக்கப்பட்ட இருவரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோட்டாட்சியர் ஜெபி கிரேஸியாவுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
