செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஒரு மணி நேரம் 38 நிமிடங்களுக்குள் முடிந்த தவெக மாநாடு: அலைகடலென திரண்ட கூட்டத்தை கடுப்படுத்த முடியாமல் திணறிய பாதுகாவலர்கள்
மதுரை:
மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் விஜய்.
மதுரை மாநாட்டுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விக்கிரவாண்டி மாநாட்டை விட பிரமாண்டமாக இந்த மாநாட்டை நடத்திவிட வேண்டுமென்பதில் தவெக தரப்பு உறுதியாக இருந்தது. அதற்காக பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு முழு திருப்தியுடன் நிறைவாக மாநாட்டை நடத்த முடியவில்லை. வெறும் ஒரு மணி நேரம் 38 நிமிடங்களுக்கு மட்டுமே மாநாடு நடந்திருந்தது.
மாநாட்டில் வாசிப்பதற்காக வைத்திருந்த தீர்மானங்களை கூட வாசிக்க முடியவில்லை. மாநாட்டை ஏன் அவ்வளவு சீக்கிரமாக முடித்தனர்?
விஜய் தரப்பின் திட்டப்படி 4 மணிக்கு மேல் வெயில் சாய்ந்த பிறகுதான் மாநாட்டை தொடங்க வேண்டும் என நினைத்திருந்தனர்.
கொஞ்சம் தாமதமானாலும் அதிகபட்சமாக இரவு 9 மணிக்குள் மாநாட்டை முடித்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால், மதியம் 2:30 மணியளவில் மேடையேறிய ஆனந்த், இன்னும் அரைமணி நேரத்தில் மாநாடு தொடங்கிவிடும்.
தலைவர் வந்துவிடுவார். பொறுமையாக இருங்கள் என அறிவித்தார். சரியாக மாலை 3:07 மணிக்கு விஜய்யின் பெற்றோர் மேடையேறி, மேடையின் இருபக்கங்களிலும் அமர்ந்திருந்த தவெக மா.செக்களுக்கு கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து நாட்டுப்புற இசைகளும் விஜய்யின் பாடல்களும் ஒலிக்க, மேடைக்கு பின்னால் கேரவனில் தங்கியிருந்த விஜய் மாலை 3:46 மணிக்கு மேடையேறிவிட்டார்.
மதுரை மா.செக்களில் ஒருவரான கல்லாணை அன்பன், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, முன்னாள் ஐ.ஆர்.எஸ் அருள்ராஜ் ஆகியோர் வேகவேகமாக தங்களின் உரையை முடித்தனர்.
அதிக நேரம் பேச விரும்பும் ஆதவ்வே 8 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டு இறங்கினார். சரியாக மாலை 4:49 மணிக்கு விஜய் மைக் பிடித்தார். ஏற்கனவே கட்டமைத்து வைத்திருந்த உரையை 35 நிமிடங்களில் பேசி முடித்தார்.
மாலை 5:24 க்கு விஜய் பேசி முடித்தார். அத்தோடு மாநாடும் முடிந்தது. சரியாக 1 மணி நேரம் 38 நிமிடங்களுக்கு மட்டுமே மாநாடு நடந்திருந்தது.
மேடையை நோக்கி திமிறி வந்த கூட்டமும், அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவுக்கு செய்யப்படாததுமே மாநாட்டை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனதற்கு காரணம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
நேற்று மாலை 4 மணிக்கென அறிவிக்கப்பட்டிருந்த மாநாட்டுக்கு அதற்கு முந்தைய நாள் மாலையே ஒரு கூட்டம் வரத் தொடங்கியது. சீக்கிரமே வந்தால்தான் மேடையின் முன்பாக இடம்பிடிக்க முடியும் என்கிற ஆர்வத்தில் இரவெல்லாம் மாநாட்டுத் திடலிலேயே எக்கச்சக்கமான பேர் தங்கியிருந்தனர்.
இந்த கூட்டம் போக, அதிகாலையிலிருந்து வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்த தொண்டர்களின் கூட்டமும் மாநாட்டுத் திடலுக்குள் நுழையத் தொடங்கியது. விக்கிரவாண்டி திடலை விட பாரபத்தித் திடல் 3 மடங்கு பெரியது.
ஆனாலும் அத்தனை பேரும் மேடையை நோக்கி செல்ல வேண்டுமென முண்டியடித்தால் நெரிசல் அதிகமாக இருந்தது. காலை 9 மணி வரைக்குமே கூட இதனால் பெரிய பிரச்னை இல்லை.
ஆனால், அதற்கு மேல் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வாட்டர் டேங், தண்ணீர் பைப்கள், வாட்டர் பாட்டில் என பலவிதங்களில் தண்ணீர் விநியோகம் செய்தும் போதவில்லை.
எல்லாருமே மேடையை நோக்கி மட்டுமே நெருக்கியதால், தண்ணீர் தேவைப்படுபவர்களால் பைப்புகளை நோக்கியும் செல்ல முடியவில்லை. வாட்டர் பாட்டில்களை முறையாக விநியோகிக்கும் திட்டத்தையும் தவெக தரப்பு செய்திருக்கவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் பலரும் மயங்கி விழும் நிலைக்கு சென்றனர். இந்த சமயத்தில்தான் தொடர்ச்சியாக கூட்டத்துக்குள் ட்ரோன்கள் மூலம் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்க முயன்றனர்.
கூட்டம் திமிறுவதாலும் கடும் வெயிலாக இருப்பதாலும் 4 மணிக்கு முன்பாகவே மாநாட்டை தொடங்கிவிடுங்கள் என தவெக தரப்புக்கு காவல்துறை மெசேஜ் சொல்லப்பட்டது.
இன்னும் அரை மணி நேரத்தில் மாநாடு ஆரம்பிக்கும் என ஆனந்த் அறிவித்தவுடன் கூட்டத்தின் வேகம் இன்னும் அதிகரித்தது. கூட்டத்தை ப்ளாக் ப்ளாக்காக பிரித்து தடுப்புகள் அமைத்து கம்பிகளில் ஏறாமல் இருக்க க்ரீஸ் தடவி வைத்திருந்தனர். அந்த தடுப்புகளையும் உடைத்துக் கொண்டு ஒரு கூட்டம் மேடையை நோக்கி முன்னேறியது.
சென்னையிலிருந்து தவெக தரப்பில் 500 + பவுன்சர்களை இறக்கியிருந்தார்கள். அதேமாதிரி விஜய்க்கு வழக்கமாக பாதுகாப்பு கொடுக்கும் துபாய் நிறுவனமும் எக்கச்சக்கமான பவுன்சர்களை இறக்கியிருந்தது. அந்த பவுன்சர்களின் டீம்களாலும் மேடையை நோக்கி பாய்ந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
முறையான திட்டமிடல் இல்லாமல் ஏனோதானோவென செயல்பட்டு பவுன்சர்கள் டீம் கோட்டைவிட்டது. விஜய் மேடையேறியதுமே ரேம்ப் முழுவதும் தொண்டர்கள் ஏறி பரபரப்பான சூழல் நிலவியது. நிலைமை கையை மீறிப் போக வாய்ப்பிருந்த சூழலில்தான் காவல்துறையினர் உள்ளே இறங்கி சடசடவென ஓரளவுக்கு கூட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தினர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரிக்கையில், 'இது ப்ரைவேட் ஈவண்ட். அவங்களே எல்லாத்தையும் பார்த்துக்குறோம்னு சொன்னாங்க. சரியா ப்ளான் பண்ணாம விட்டுட்டாங்க...' என தகவல் சொல்கின்றனர்.
கடும் வெயிலும் மேடையை நோக்கி திமிறி எழுந்த கூட்டமும்தான் மாநாட்டை சீக்கிரமே முடித்துக் கொள்ள காரணமாக இருந்தது. தண்ணீருக்கு நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால், அதை விநியோகம் செய்வதில் சிக்கல் இருந்தது.
அதேமாதிரி, முறையான திட்டமில்லாத பவுன்சர்கள் டீமையும் நம்பி தவெக தரப்பு ஏமாந்திருக்கிறது. இதிலெல்லாம் கவனம் செலுத்தியிருந்தால் மாநாட்டு தீர்மானங்களை X தளத்தில் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
