நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகம் முழுவதும் 107 டன் கஞ்சா, 3.59 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்: பல்கலைக்கழக மாணவர்களிடம் 5,250 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

சென்னை: 

தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிககையால் 107 டன் கஞ்சா, 3.59 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 2,412 மெத்தப்பெட்டமைன், கொக்கைன் போன்ற பிற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக “பூஜ்ஜிய கஞ்சா சாகுபடி“ என்ற இலக்கினை மேற்கொண்டு வருவதால், இங்கு புகழக்கத்தில் உள்ள போதைப்பொருட்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களிலிருந்தும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் கடத்தி வரப்படுகின்றன.

மேலும், தமிழக முதல்வர் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு காவல்துறை ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் அதிரடி சோதனை மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்களையும் கடத்தலில் ஈடுபடும் நபர்களையும் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் கடந்த 2021 ஜீன் முதல் 2025 ஜூலை வரையில், தமிழ்நாடு காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஆந்திரா, ஒடிசா, வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 107 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்திருந்த 3 லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட மெத்தப்பெட்டமைன், கொக்கைன், கஞ்சா ஆயில் என 2412 கிலோ பிற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளது.

இதுதவிர கடந்த ஜூலை மாதம் தாம்பரம் அடுத்த பிரபல தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 5,250 எண்ணிக்கையிலான கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 2023 மற்றும் 2025 ஜூன் மாத்திற்கு இடையில், மருந்து அடிப்படையிலான போதைப்பொருள் பறிமுதல் 39,910- என்ற எண்ணிக்கையிலிருந்து 1.42 லட்சத்திற்கும் அதிகமான மாத்திரைகளாக உயர்ந்துள்ளது. போதை மாத்திரைகள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே அதிக எண்ணிகையில் பயன்படுத்தி வருவது சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகள், போதை மாத்திரை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடநத் 5 ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 61 டன் அளவிலான கஞ்சா, உள்ளிட்ட போதை பொருட்கள் காவல்துறை சார்பில் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா, மெத்தப்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் சொத்துக்களை முடக்கி தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 முதல் 2025 ஜூன் வரையில், போதை பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பான வழக்குகளில் நேரடியாகத் தொடர்புள்ள நபர்களின் ரூ.21 கோடி மதிப்புள்ள 45 சொத்துக்கள் மற்றும் 10,741 வங்கிக் கணக்குகளைச் சட்ட அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset