நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பக்காத்தான் ஹராப்பான் பரிசான் நேசனல் கூட்டணி வலுவாகவும் சிறப்பாகவும் உள்ளது: சிவநேசன்

ஈப்போ:  

மலேசிய அரசியல் களம் கடந்தக்காலங்கள் போல் இல்லை. அது ஒட்டுமொத்தமாக புதியதொரு சூழலுக்கு மாற்றம் கண்டுள்ளது என்று பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநசன் கூறினார்.

கடந்த 2008ஆம். ஆண்டில் முதன்முறையாக 5 மாநிலங்களை எதிர்கட்சிகள் கைப்பற்றி புதியதொரு அரசியல் அத்தியாயத்தை இந்நாட்டில் எழுப்பியது. அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் மக்கள் எதிர்க்கட்சியை அரசியல் சிம்மாசனத்தில் அமர வைத்து 60ஆண்டுக்களுக்கு மேலான அரசியல் சூழலை தகர்த்தனர்.

துன் மகாதீரின் செயல்பாட்டால் மிக குறுகியக் காலத்தில் ஆட்சி கேள்விக்குறியானது.

இருந்தபோதிலும் 2022இல் மீண்டும் பாக்காத்தான் ஹராப்பான் தேசிய முன்னணியோடு ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து மலேசிய அரசியல் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்தனர். இனிமேல்,மலேசிய அரசியல் எதார்த்தம் 2008ஆம் ஆண்டுக்கு முன் இருந்தது போல் இருக்காது என்பதை அனைத்து தரப்பும் உணர வேண்டும் என்றார் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் அவர்கள்.

நாட்டின் அரசியல் கட்டமைப்பு மாறிவிட்டது.தனித்து போட்டியிடும் போக்கு இருக்காது.கூட்டணி செயல்பாடுகளே அரசியல் களத்தின் பலத்தை உறுதி செய்யும் என்றார்.

அண்மையக்காலமாய் நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகவும் வலுவான மக்களின் நம்பிக்கைக்குரிய அரசாங்கமாகவும் பாக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கம் திகழ்வதை மறுப்பதற்கில்லை.

தேசிய முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல், அந்த கூட்டணியின் சொந்த விவகாரம். அது குறித்து சொலவதற்கு எதுவுமில்லை.

ஆனால்,ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் பாக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணியின் கூட்டுச்செயல்பாட்டால் வலுவான கூட்டணியாய் நம்பிக்கையை விதைத்து வருவதை உணரவே முடிகிறது.

பாக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணி வலுவாகவே உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் அண்மைய ஆயீர் கூனிங் இடைத்தேர்தல் கூட அதனை நிரூபித்துள்ளது.

பேரா மாநிலத்திலும் ஒற்றுமை அரசாங்கம் நல்லதொரு புரிந்துணர்வோடு நனிச் சிறப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒருக்காலத்தில் பரம எதிரியாக கருதப்பட்ட அம்னோ – ஜசெக இக் கூட்டணியில் கரம்கோர்த்து நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி மக்களின் நல்வாழ்விற்கும் களத்தில் நிற்பது மலேசியாவின் அரசியல் உருமாற்றத்தின் உச்சம் என்றும் குறிப்பிட்ட சிவநேசன் நாட்டின் அடுத்தப் பொதுத்தேர்தலிலும் இக் கூட்டணி தொடரும் என்றார்.

பாக்காத்தான் ஹராப்பான் இல்லாமல் தேர்தலை தேசிய முன்னணி சந்திக்க நேரிட்டால், அது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பெரிக்காத்தான் கூட்டணியோடு தேசிய முன்னணி கைகோர்த்தால் அது தேசிய முன்னணியின் அடையாளத்தை தொலைத்து அரசியல் களத்தில் பெரும் சரிவாய் அமைந்துவிடும். இந்த அரசியல் எதார்த்தத்தை அம்னோவின் முதன்மை தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இந்த 2 ½ ஆண்டுகால ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்பாட்டால் அது சாத்தியப்படுத்தப்பட்டும் உள்ளதை சிவநேசன் மேலும் சுட்டிக் காண்பித்தார்.

பெரிக்காத்தான் நேசனல் தேசிய முன்னணியோடு தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் ஈடுப்பட்டால் அதில் பெரும் சிக்கல்கள் உருவாகும்.

ஆனால்,பாக்காத்தான் ஹராப்பானோடு தேசிய முன்னணி தொடர்ந்தால் அது அம்னோவிற்கும் தேசிய முன்னணிக்கும் பெரும் பலமாகவும் அரசியல் களத்தில் வலுவாக தேசிய முன்னணி பீடுநடை போடவும் வழிகோலும் என அம்னோவின் முக்கியத்தலைவர்களின் அண்மையக்கால கருத்துரைகள் தெளிவான தூரநோக்கு அரசியல் பார்வையின் சான்று எனவும் அவர் நினைவுறுத்தினார்.

பேரா மாநிலத்தைப் பொருத்தமட்டில் ஒற்றுமை அரசாங்கமும் அதன் கூட்டணியும் வலுவாக செயல்படுகின்றன.மாநில மந்திரி பெசாரும் இக்கூட்டணியில் தொடர்வதை பெருமிதமாகவும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் மேலோங்கியிருக்கும் கூட்டணியாகவும் இருப்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தியும் வருகிறார்.

அம்னோவைப் பொருத்தமட்டில் அதன் அடிமட்டம் தொடங்கி முதன்மை தலைவர்கள் வரை பாக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் உறுதியாகவே உள்ளனர் என்றார்.

மலேசிய அரசியல் நீரோட்டத்தில் தேசிய முன்னணி தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்க வேண்டுமானால் நடப்பில் இருக்கும் கூட்டணி தொடர வேண்டும் என்பது அதன் தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி உட்பட முன்னணி தலைவர்களின் விருப்பமாகவே உள்ளது என்பதையும் கூறிய அவர் அம்னோவின் பிரபலகங்களில் ஒருவரான லொக்மான் நோர் அடாம் கூட இந்த கூட்டணி நாட்டின் நிலைத்தன்மைக்கான வலுவான கூட்டணி என்பதை சுட்டிக்காட்டியிருப்பதையும் சிவநேசன் நினைவுக்கூர்ந்தார்.

முன்னதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துரோன் அன்வார் பேரணி இந்தியர்களின் ஆதரவை ஒருபோதும் பெறவில்லை. இந்தியர்களுக்கு தலைமையேற்கவோ, அவர்களை ஒருங்கிணைக்கவோ அங்கு நம்பிக்கையானவர்கள் இல்லை என்பதை இந்தியச் சமூகம் நன்கு உணர்ந்துள்ளது.

அந்த பேரணியில் இந்தியர்களை கலந்து கொள்ள அழைத்தவர்கள் எல்லாம் சந்தரப்பவாதிகள் என்பதை இந்தியச் சமுதாயம் தெளிவாகவே உணர்ந்துள்ளது என்றார் சிவநேசன்.

நாட்டின் அடுத்த பொதுத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விகளும் விவாதங்களும் அண்மையக்காலமாய் பேசும் பொருளாக இருந்து வரும் நிலையில் பாக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணியே நாட்டின் நிலையான அரசியல் போக்குக்கான கூட்டணி என்பதை அம்னோவின் தலைவர்களும் தேசிய முன்னணியின் தலைவர்களும் வலுவான உறுதிப்படுத்துகின்றனர் என்றார் சிவநேசன்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset