நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து ஆலயங்களில் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுவதற்கு மலேசிய இந்து சங்கம் என்ன செய்கிறது: சிவசுப்பிரமணியம்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் இருக்கின்ற இந்து கோயில்கள் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன. 

இந்த நிலைமை, நம் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் பெரும் அவப்பெயரையும் சங்கட்டத்தையும் ஏற்படுத்துகின்றன என்று மஇகா தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியம் ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பிரச்சனை குறித்து நாடே அறியும்.

அதற்கு முன்பு பிரிக்பீட்ஸ்ல் சிவன் ஆலயத்தில் இரண்டு தரப்பினர் நிர்வாக அளவிலும் நிதி அடிப்படையிலும் சண்டையிட்டுக் கொண்டு ஒரு தரப்பார் பக்தர்களை வெளியேற்றிவிட்டு பூட்டுபோட, இன்னொரு தரப்பினர் பூட்டப்பட்டபூட்டை வெட்டிய காட்சிகளை எல்லாம் பார்த்த சமயப் பெரியவர்களும் ஆன்மீக, அரசியல் தலைவர்களும் மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாகினர்.

அதற்கு சில காலத்திற்கு முன்பு சுங்கைவே ஸ்ரீ ஈஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகத்தை ஆர்ஓஎஸ் மூலம் அரசாங்கமே எடுத்துக் கொண்டது. 

தொடர்ந்து சுங்கைப் பட்டாணி பத்துடுவா அம்மன் ஆலயத்திலும் இதே சிக்கல் ஏற்பட்டு அரசாங்கம் தலையிட்டு ஆலய நிர்வாகத்தை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிர்வாக தரப்பில்  மோதல் ஏற்பட்டது.

இப்படி வரிசையாக நம் ஆலயங்கள் போலீஸ் நிலையத்திற்கும்  நீதிமன்றத்திற்கும் சென்று கோயில் பிரச்சனை சம்பந்தமாக புகார் செய்வதும் வழக்காடுவதுமான நிலைமை தொடர்கிறது. 

நாட்டின் கிழக்கு பகுதியில் பகாங் மாநிலத்தில் பிரபலமான அருள்மிகு மரத்தாண்டவர் ஆலயப் பிரச்சினை குறித்து நீதிமன்றமே சலிப்படைந்து இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டது.  

நீதிபதிகளே தலையிட்டு பரிந்துரை செய்யும் அளவிற்கு ஆண்டாண்டு காலமாக இந்த ஆலய நிர்வாகம் நீதிமன்றத்தையே சுற்றி வலம் வருகிறது.

இந்த ஆலயத்தில் ஆண்டாண்டு காலமாக இரண்டு நிர்வாக  தரப்பினர் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக சண்டையிட்டுக் கொள்கின்றனர். 

மற்ற சமய வழிபாட்டு தலங்களுக்கு இது போன்ற சிக்கல் இல்லாத நிலையில்  மலேசியாவில் இந்து சமய ஆலயங்களுக்கு  மட்டும் இத்தகைய பிரச்சனை தொடர்கிறது என்றால் இதை எல்லாம் தீர்க்க வேண்டிய மலேசிய இந்து சங்கம் என்ன செய்கிறது என்று சிவசுப்பிரமணியம் வினா தொடுத்துள்ளார்.

இந்த நாட்டின் தாய்க் கட்சியான மஇகா-வின்  தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் என்பதைவிட மலேசிய இந்து சங்கத்தில் வாழ்நாள் சப்ப உறுப்பினராக இருக்கும் தனக்கு இத்தகைய நிலைமை மிகுந்த வருத்தத்தையும்  வேதனையையும் அளிப்பதாக எல். சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

மலேசிய இந்து சங்கம் சிறப்பாக செயல்படாவிட்டாலும் ஓரளவுக்காவது விழிப்புடன் இருந்தால்  நம் ஆலயங்கள் இப்படி காலமெல்லாம் பிரச்சனைய எதிர்கொள்வதை தடுக்க முடியும்  என்று சிவசுப்பிரமணியம் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset