நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்

தஞ்சோங் மாலிம், மார்ச் 12-

தஞ்சோங் மாலிம் தான் ஸ்ரீ டத்தோ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி தனது வரலாற்றில் மிகப்பெருமை தமதாக்கிக் கொண்டுள்ளது. அந்தப் பெருமையின் காரணம்  - அகிலன் இளங்குமரன் எனும் மாணவனால் இந்த பெருமை அப்பளிக்கு கிடைத்துள்ளது.

Pusat Genius @ PERMATA Pintar Negara எனும் மலேசியாவின் கூர்மதி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மையத்தில் பயில, அகிலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இது சாதாரணமான தேர்வு அல்ல. மாறாக 500,000 மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வில் நுண்ணறிவு (IQ) பரிசோதனை,  நேர்முகத் தேர்வின் கடினமான முடிவில் வெறும் 50 மாணவர்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த ஆண்டு, மலேசியா முழுவதிலிருந்தும் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி மாணவருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த மாணவர் அகிலன் இளங்குமரன் என்பது தமிழ்ச்சமூகத்திற்கே பெருமை கொள்கின்றது.

வழக்கமான பாதையை தாண்டிய சாதனை

அகிலனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதால், அவர் வழக்கமான இடைநிலைப் பள்ளி பயிற்சியைத் தொடர்ந்து செல்வதற்கு அவசியமில்லை. மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (UKM) கீழ் செயல்படும் Pusat Genius @ PERMATA Pintar கல்வி மையத்தில் சிறப்பு கல்விப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறார்.

இது, டான் ஸ்ரீ டத்தோ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்பதும், அந்த மாணவன் அகிலன் என்பதும், பள்ளிக்கே புதிய உயரத்தை சேர்த்துள்ளது.


போட்டிகளில் வீறுகொண்டு சாதனைகள் குவித்த அகிலன்

அகிலனைப் பற்றி பேச வேண்டுமென்றால், அவர் வெற்றியை சாதாரணமாக பின்தொடர்ந்தவன் அல்ல — வெற்றிகள் அவரை தொடர்ந்து வந்தவை!

    •    தஞ்சோங் மாலிம் வட்டார போட்டிகளில் பல முறை வெற்றி பெற்றுள்ளார்.

    •    மாநில அளவிலான போட்டிகளில் வட்டாரத்திற்குப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கும் வெற்றியை தனதாக்கியவர்.

    •    அனைத்துலக போட்டிகளில் கூட தனது திறமையால் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நம்பிக்கை நட்சத்திரமான அகிலன், பள்ளியின் “நனிசிறந்த மாணவர்” விருதும் பெற்றுள்ளார்.


தலைமையாசிரியரின் பெருமித உரை

“இத்தகைய ஓர் அரிய வாய்ப்பை நம் பள்ளி மாணவர் பெறுவதை பார்க்கும் நாளை எதிர்பார்த்து இருந்தேன். இன்று அது நினைவிலிருக்கும் தருணமாக மாறியுள்ளது. 

அகிலனின் சாதனை, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கே ஒரு முன்னுதாரணம். எங்கு சென்றாலும், எந்தப் போட்டியில் பங்கெடுத்தாலும், வெற்றியுடன் தான் திரும்புவார்.. பள்ளியின் வரலாற்றில், இன்று அகிலன் புதிதாக எழுதிவைத்த வெற்றிக்கதை, இன்னும் பல மாணவர்களுக்கு உந்துசக்தியாக அமையும்!” என தலைமையாசிரியர் முருகேசு அத்தியப்பன் பெருமையுடன் தெரிவித்தார்.

அகிலன் இளங்குமரனுக்கு நம்பிக்கை ஊடகத்தின் வாழ்த்துகள்! அவரின் சாதனைகள் தொடர்ந்து மலர, நம் சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும், வாழ்த்துகளையும் அவருக்கு தெரிவிப்போம்

தமிழ்மக்களின் பெருமை — அகிலன்!

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset