நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மம்முட்டி எழுதிய உருக்கமான அஞ்சலி கடிதம்

’ஒரு நாள் மதிய நேரம் கிடைத்த பாறையின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். விழிக்கும்போது காரின் பின்சீட்டில் இருந்தேன். என்னை தூக்கி காரில் படுக்க வைப்பதற்கான ஆரோக்கியம் வேணுவிற்கு இருந்தது’- நடிகர் நெடுமுடிவேணு மறைவுக்கு மம்மூட்டி எழுதிய கடிதத்தை பிரியா தம்பி தமிழாக்கம் செய்துள்ளார்.

1981 ல் ’’கோமரம்’ என்கிற சினிமாவின் படப்பிடிப்பில் தான் நாங்கள் அறிமுகமானோம். …எங்கள் நட்பு அங்கேதான் தொடங்கியது. சென்னையில் ஒன்றாக நாங்கள் ரஞ்சித் ஹோட்டலில் முதலில் தங்கினோம். பின்னர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் காட்டேஜ் வாசம். 1985 வரை இது தொடர்ந்தது. வேணுவின் நட்பில் எனக்கு நினைவுகூற நிறைய விஷயங்கள் உண்டு.

புதிய காட்சிகளுக்கு, புதிய உலகத்திற்கு புதிய புரிதலுக்கான வாசலை திறந்தது வேணு தான்.. நாடகம், சங்கீதம், நாட்டுப்புற கலைகள், கதகளி, கூடியாட்டம் என புதிது புதிதாக வாசல்களை திறந்து காண்பித்துக் கொண்டே இருந்தார். வேணுவோடான அந்தக் காலத்தில் துக்கத்தை நான் அறிந்ததே இல்லை. எப்போதும் புதிதாக சொல்ல வேணுவிடம் விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு அப்படியான விஷயங்கள் எதுவும் வேணுவிடம் பகிர இருந்ததில்லை.

Mammootty shares a poignant tribute to 'elder brother, guide and unmatched  talent' Nedumudi Venu

1982-ல் நல்ல நடிகர் விருது அவருக்கும், துணை நடிகர் விருது எனக்கும் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஒன்றாக திருவனந்தபுரம் போய் விருது வாங்கி, எர்ணாகுளம் வந்து உணவை முடித்து திருச்சூர் ஷூட்டிங் சென்றது இன்றும் நினைவில் இருக்கிறது.

சென்னையில் நாங்கள் ஒன்றாக வசித்த காலங்கள் தான் என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான காலங்கள் என எனக்குத் தோன்றும். அப்போது நிறைய ஷூட்டிங்குகள் மெட்ராஸில் தொடர்ச்சியாக இருந்தன. 83, 84 காலத்தில் மாதக்கணக்கில் நாங்கள் ஒரே அறையில் தொடர்ந்து வசித்ததுண்டு.

அக்காலத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தான் ஷூட்டிங் விடுமுறை உண்டு. ஊருக்குப் போக முடியாது. ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவை தின வாடகைக்கு அழைத்து காலையில் கிளம்புவோம். சின்ன ஷாப்பிங், மலையாளி ஹோட்டலில் மூக்குமுட்ட உணவு, மேட்னி, செகண்ட் ஷோ சினிமா முடித்து அறைக்கு வருவோம். இரண்டு மூணு சினிமாக்கள் ஒரே நேரத்தில் நடித்த காலம் அது. மதிய இடைவேளையில், கிடைக்கும் இடத்தில் நியூஸ் பேப்பரில் படுத்து உறங்குவோம். வெயில் வரும் நேரம், வேணு என்னை எடுத்து தலையணையில் படுக்க வைத்த பல நேரங்கள் உண்டு.

The Stardom of Mohanlal, Mammootty, Dileep and the Dynamics of Caste in the  Malayalam Film Industry

ஒரு நாள் மதிய நேரம் கிடைத்த பாறையின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். விழிக்கும்போது காரின் பின்சீட்டில் இருந்தேன். என்னை தூக்கி காரில் படுக்க வைப்பதற்கான ஆரோக்கியம் வேணுவிற்கு இருந்தது. நான் அன்று இத்தனை கனமாக இல்லை.

இப்படியாக வேணு என் நண்பரானார். சினிமாவில் அவர் எனக்கு அண்ணன், அப்பா, மாமா என பல கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு, சொந்த வாழ்க்கையிலும் தொடர்ந்ததாக எனக்குத் தோன்றியதுண்டு. அந்த கதாபாத்திரங்களுக்கு அப்புறமும் அவர் எனக்கு எல்லாமாக இருந்தார்.

கடந்த என் பிறந்தநாளிலும் எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார். வாணவேடிக்கை போன்ற பிரம்மாண்ட பிறந்தநாள் வாழ்த்துகளால் நிரம்பிய தினமாக அது இருந்தது. அதற்கு இடையிலும், அந்த சிறு தீபத்தின் ஒளியை நான் கையில் வாங்கினேன். என்றும் அந்த வெளிச்சம், என் வழிகாட்டியாய் இருந்திருக்கிறது.. இருக்கும்.. கடந்த என் பிறந்தநாளைக்கும் சுசீலா அம்மாவின் (வேணுவின் மனைவி) புதிய வேட்டியும், கடிதமும் எனக்கு வந்திருந்தது.

நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பீஷ்மபர்வம், புழு ஆகிய இரு படங்களிலும் வேணு என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார். வேணு என்னை தம்பியைப் போல் கருதிய என் சகோதரன், என் வழிகாட்டி, என் நண்பன், எனக்கு அறிவுரை சொன்ன என் தாய்மாமன்.. நிறைய நேசித்த என் தகப்பன்.. அதற்கு அப்புறமும் நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத எல்லாமுமாயிருந்தார். என்னால் அவருக்கு விடைதர முடியாது. என்றும் என் நெஞ்சில் அவர் இருப்பார். ஓவ்வொரு மலையாளி நெஞ்சிலும் மங்காத நட்சத்திரமாக ஜொலித்து நிற்பார். நான் கண்களை மூடி, கைகளை கூப்பி நிற்கிறேன்.

தமிழாக்கம் – பிரியா தம்பி

தொடர்புடைய செய்திகள்

+ - reset