நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் 2025 முதல்  புதிய டீசல் கார்களுக்குத் தடை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் 2025 ஜனவரி 1 முதல் புதிய டீசல் கார்களும் டாக்சிகளும் பதிவு செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2040ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் உள்ள எல்லா வாகனங்களையும் மாசு ஏற்படுத்தாத எரிசக்தியில் இயங்கச் செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதிகமாக மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கட்டம் கட்டமாக அகற்றுவதற்கான அறிவிப்பு மூன்றாண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

2021 மார்ச் மாதம் அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான திட்டங்கள் மீதான விவாதத்தின்போது அந்த அறிவிப்பு வெளியானது.

அப்போது முதல் புதிய டீசல் கார்கள் மற்றும் டாக்சிகளுக்கான பதிவு மொத்த வாகனப் பதிவில் 1 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.

மாசு ஏற்படுத்தாத பிற வாகனங்கள் எளிதில் கிடைப்பதன் எதிரொலியாக அந்தக் குறைவான விகிதம் தொடர்வதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

2030ஆம் ஆண்டு முதல் மாசு ஏற்படுத்தாத எரிசக்தியில் இயங்கும் கார்கள், டாக்சிகள் மட்டுமே சிங்கப்பூரில் பதிவு செய்யப்படும்.

அதற்கான தொடக்கமாக, 2025ஆம் ஆண்டு முதல் புதிய டீசல் கார்கள், டாக்சிகளுக்கான பதிவு தடை செய்யப்பட உள்ளது.

அதேநேரம், 2025 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் டீசல் கார்களைப் பதிவு செய்யும் வாகன உரிமையாளர்கள் 2025 கெடுவுக்குப் பின்னர் தங்களது வாகனத்திற்கான வாகன உரிமைச் சான்றிதழை புதுப்பிக்க முடியும்.

ஆயினும், புதுப்பித்தல் ஆர்வத்தைக் குறைக்கும் விதமாக அதற்கு அதிகமான சாலை வரி வசூலிக்கப்படக்கூடும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset