நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இளம் இசையமைப்பாளர்கள் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்: இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்

கோலாலம்பூர்: 

இளம் இசையமைப்பாளர்கள் இசைத் துறையில் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று இசையமைப்பாளரும் ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர். ரஹ்மான் கேட்டுக் கொண்டார். 

இம்மாதம் 27-ஆம் தேதி புக்கிட் ஜலீல் அரங்கில் நடக்கவிருக்கும் தனது இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக, ரசிகர்களுடனான சந்திப்பு நேற்று Menara PGRM- மாலை 7.00 நடைபெற்றது. இந்நிலையில் இசைப்புயலைக் காண அவரது இரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

இரசிகர்களுடனான சந்திப்பில் அவரிடம் பல கேள்விகளும் முன் வைக்கப்பட்டன. 

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் யாருடைய பாணியையும் பின்பற்றாமல் தங்களுக்குரிய பாணியில் தனித்துவமான இசையை வழங்க வேண்டும் என்று ஏ ஆர் ரஹ்மான் வலியுறுத்தினார். 

இசையை அனைவரிடமும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொடுக்க இசையை அடிப்படையாகக் கொண்டு தங்களின் சுய ரசனையை அதில் சேர்க்கும் போது அந்த இசை தனித்துவம் பெறும் என்று ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது அவர் கூறினார்.

இசைத்துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் நன்மை தீமை இருப்பதை ஏ. ஆர். ரஹ்மான் மறுக்கவில்லை. இந்தச் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஒரு போதும் மனிதனின் தனித்துவமான ஆற்றலுக்கு இணையாகாது என்று அவர் தெரிவித்தார். 

இன்றைய இசைத்துறையில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த பாடுபடும் இளம் இசையமைப்பாளர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவார் என்ற ரசிகரின் கேள்விக்கு 
“ஆடுகளாக இருக்காதீர்கள். புலியாக இருக்க வேண்டும் என்று ரஹ்மான் பதிலளித்தார்.

மேலும், புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுடனான தனது மறக்க முடியாத சந்திப்புகளைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்டார். 

இசை மற்றும் உலக அமைதி குறித்து அவர்கள் ஆழமான உரையாடல்களைக் கொண்டிருந்ததாகப் பகிர்ந்து கொண்டார்.

ஜாக்சன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, 2009-ஆம் ஆண்டில், ஜாக்சன் தனது குழந்தைகளுக்கு அவரை அறிமுகப்படுத்தியதையும், உணர்ச்சிபூர்வமான தொடர்பைப் பகிர்ந்து கொண்டதையும் ரஹ்மான் அன்புடன் நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில், 1996-ஆம் ஆண்டு மலேசியாவில் தனது முதல் இசை நிகழ்ச்சியை நடத்திய ரஹ்மானுக்கு, மலேசியாவின்  கலாச்சார பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்ட பத்தேக் சட்டை வழங்கப்பட்டது.

கடந்த ஏப்ரலில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட மலையாள பிளாக்பஸ்டர் படமான ஆடுஜீவிதம் திரைப்படத்திலுள்ள பெரியோனே என் ரஹ்மானே என்ற பாடலின் இரு வரிகளைப் பாடி இந்நிகழ்ச்சியிலிருந்து விடைபெற்றார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset