நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நாட்டின் மூத்தக் கலைஞர் இயக்குநர் விஜயசிங்கம் காலமானார் 

கோலாலம்பூர்:

நாட்டின் மூத்தக் கலைஞரும் பிரபல இயக்குநருமான விஜயசிங்கம் காலமானார். அவருக்கு வயது 78 ஆகும். இன்று ஜூன் 12ஆம் தேதி காலையில் அவர் காலமானதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்தனர். 

மலையக மண்ணில் கடந்த 50 ஆண்டுகளாக கலைத்துறைக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டு பல உள்ளூர் கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சாரும். 

கே. குணசேகரன், வே. தங்கமணி, திவாகர் சுப்பையா, வைரகண்ணு இவர்களை துணை இயக்குநர்களாகவும் பிரதான நடிகர்களாகவும் அறிமுகப்படுத்தியவரும் இவரே. இவர்களைப்போன்று நூற்றுக்கணக்கான புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். 

டெலிமூவி தொடர்கள், தீபாவளி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் என இவரின் படைப்புகளின் எண்ணிக்கை 500க்கும் மேற்பட்டவையாகும். 

அதுமட்டுமல்லாமல், 56 டெலி மூவிகளை இவர் இயக்கியுள்ளார். கலைத்துறைகாக 13 உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். 

1963ஆம் ஆண்டு தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க தொடங்கிய விஜயசிங்கம் கந்தசாமி, அந்நாளில் பெரிதும் வரவேற்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சேகர் தொடரில் சிறப்பாக நடித்திருந்தார். 1970ஆம் ஆண்டுகள் வரை பல தொடர் நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தைப் பெற்றார். 

1964ஆம் ஆண்டு துன் ச.சாமிவேலு அவர்களால் உருவாக்கப்பட்ட கலைஞர்கள் நாடக மன்றத்தில் இணைந்து சேவையாற்றினார். 

அதுமட்டுமல்லாமல், நடிப்பு உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பின் ஈர்ப்பால் 2001ஆம் ஆண்டு மலேசிய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தைத் தோற்றுவித்து தலைவராகவும் செயல்பட்டு வந்தார். 

இறுதியாக அவர் எடுத்த காதல் அது ரகசியமானது திரைப்படம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதுவே அவரின் இறுதி படைப்பாக அமைந்தது.  

நம்பிக்கை குழுமம் ஏற்பாடு செய்த நம்பிக்கை நட்சத்திர விருது விழா (2023) வில்  வெற்றியாளருக்குப் பரிசுகளை எடுத்து வழங்கி நம்பிக்கை குழுமத்திற்குப் பெருமை சேர்த்தார். 

இவ்வேளையில், இயக்குநர் விஜயசிங்கத்தை   இழந்து வாடும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஊடகம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset