நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விக்டோரியா அண்ட் அப்துல்: நட்பைப் பேசும் அருமையானத் திரைப்படம்

நெட்ஃப்ளிக்ஸில் 'விக்டோரியா அண்ட் அப்துல்' திரைப்படத்தைப் பார்த்தேன்.

இங்கிலாந்து அரசி விக்டோரியாவுக்கும், ஆங்கில ஆதிக்கத்திலிருந்த இந்தியாவிலிருந்து சென்ற அப்துல் கரீம் என்ற பணியாளருக்குமான நட்பைச் சொல்கிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையிலான கதை.

ஷ்ரபானி பாஸு எழுதிய 'Victoria & Abdul: The True Story of the Queen's Closest Confidant' என்ற புத்தகத்தின் அடிப்படையில் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

1887ல் ஆக்ரா சிறையில் எழுத்தராக பணிபுரியும் அப்துல், விக்டோரியா அரசியின் பொன்விழாவில் அவருக்கு சிறப்பு நாணயம் ஒன்றை பரிசளிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பப்படுகிறார்.

80 வயதில் சம்பிரதாய அரச பொறுப்புகள், பிள்ளைகளின் பதவி ஆசை, உடல்பிரச்சனைகளால் வாழ்வில் சலிப்புற்றிருக்கிறார் ராணி. 

அப்துலின் பேச்சு அவருக்கு ஒருவித மலர்ச்சியைத் தருகிறது. அவரை தனது முன்ஷியாக (ஆசிரியராக) நியமித்து உருது மொழியையும், குர் ஆனைம் கற்கிறார். அவரது மனைவியையும், குடும்பத்தையும் இலண்டனுக்கு வரச்செய்கிறார்.‌ மகனானக் கருதி அப்துலிடம் அன்பு காட்டுகிறார்.

அப்துலுக்கு அரசி அளிக்கும் முக்கியத்துவம் அரண்மனை வட்டாரத்தில் ஏற்படுத்தும் சலசலப்பு, இருவருக்குமான நட்பில் ஏற்படும் உரசல், ஆங்கிலேயர்களின் இனவெறி, இந்திய வெறுப்பு, மேட்டிமைத்திமிர் என்று படம் பல விசயங்களைப் பேசுகிறது. அதிகாரமிக்க உயர்பதவியில் இருந்தாலும் வயது முதிர்ந்த அரசியின் தனிமையும், அன்புக்கு ஏங்குவதும் நெகிழ்வு ! 

அரசியின் மறைவுக்குப் பிறகு அப்துல் கரீம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்; இருவரின் கடிதங்கள் உள்ளிட்ட அவர்களின் நட்புக்கான தடயங்களை அரசியின் மகன் அழித்துவிடுகிறார் என்று படம் முடிகிறது.

அப்புறம் எப்படி ஷ்ரபானி பாஸுவுக்கு இவர்களைப் பற்றி தெரிய வந்தது? தொன்னூறுகளின் இறுதியில் விக்டோரியா அரசியின் பழைய வீட்டில் (Osborne House) அப்துல் கரீமின் படத்தை தற்செயலாகப் பார்த்திருக்கிறார் ஷ்ரபானி.

ஆர்வமிகுதியில் அவரைப் பற்றிய தகவல்களைத் தேட, இருவரின் நட்பும் வெளிச்சத்திற்கு வந்தது. அதைத் தான்'Victoria & Abdul: The True Story of the Queen's Closest Confidant' என்ற நூலாக எழுதினார். 

சில சமயங்களில் கற்பனைக் கதைகளைவிட யதார்த்தம் படுசுவாரசியமாக இருக்கிறது.

- கீதா இளங்கோவன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset