நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பலஸ்தீன் விவகாரத்தில் இலங்கை அதிபர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்: இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவந்த ரவூப் ஹக்கீம் 

கொழும்பு:

பலஸ்தீன் விவகாரத்தில் இலங்கை அதிபர் இரட்டை நிலைப்பாட்டை வகிக்கிறார். அவர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். இந்த அரசாங்கம் அமெரிக்காவின் அடிமையாகவே இருந்து வருகிறது. உண்மையில் அரசாங்கத்துக்கு பலஸ்தீன் மீது அக்கறை இருக்குமானால் இஸ்ரேல் பிரதமரை சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தென் ஆபிரிக்காவின் கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பலஸ்தீனின் தற்போதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இஸ்ரேல் அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிப்பதாக எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோன்று பல நாடுகளும் அதற்கு ஆதரவளித்து வருகின்றன. 

ஆனால் பிராந்தியத்தில் சில நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை இன்னும் பேணிக்கொண்டு வருகின்றன. நமது இலங்கை அரசாங்கமும் இந்த தீர்மானத்தில் இருக்கிறது. அண்மையில் எமது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்த சபையில் உரையாற்றும்போது, நாங்கள் இஸ்ரேல், ஈரான் உறவை சமநிலைப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், ஈரான் ஜனாதிபதி இங்கு வந்தார், நாங்கள் செங்கடலுக்கு எமது படைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இது வெட்கப்படவேண்டிய விடயம் அல்லவா? இதுதானா அரசாங்கத்தின் இராஜதந்திர உறவின்  பெரும் அடைவு? 

அதேநேரம்  பலஸ்தீன் விடயத்தில் ஜனாதிபதி இரட்டை நிலைப்பாட்டை வகிக்கிறார். அவர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். இந்த அரசாங்கம் அமெரிக்காவின் அடிமையாகவே இருந்து வருகிறது. 

ஜனாதிபதி பைடனின் வேண்டுகோளுக்கு ஆதரவளிப்பதை அரசாங்கம் இராஜதந்திரம் என தெரிவிக்கிறது. 

காஸாவை அழிப்பதற்கு பைடன் அரசாங்கம் 2 ஆயிரம் குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்குகிறது. ஆனால் பைடனின் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

இஸ்ரேலில் பண்ணைகளில் பணிபுரிய இலங்கை வறிய மக்களை அனுப்புகிறார் இங்குள்ள தொழில் அமைச்சர்  

 அதேவேளை, இஸ்ரேலில் பண்ணைகளில் தொழில் செய்துவந்த  வறிய பலஸ்தீனியர்களை அங்கிருந்து இஸ்ரேல் துரத்தியடித்துள்ளதோடு, கொலை செய்ததாலும் அங்கு பண்ணைகளில் தொழில் செய்வதற்காக எமது நாட்டின் தொழில் அமைச்சர் இங்குள்ள வறிய மக்களை அங்கு தொழிலுக்காக அனுப்பி வருகிறார்.

பலஸ்தீனச் சிறுவர்களுக்கென அரசாங்கம் நிதி சேகரித்தது. ஆனால் அந்த நிதியும் பொது மக்களின் நிதியே தவிர அரசாங்கத்தின் நிதி அல்ல. அரசாங்கம் அதில் பெயர் போட்டுக்கொள்கிறது. உண்மையில் பலஸ்தீனத்துக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திடம் இருந்தால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தென் ஆபிரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவளியுங்கள்.

மத்திய கிழக்கு நாடுகளை எப்போதும் கொந்தளிப்பில்  வைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இஸ்ரேலும்,அமெரிக்காவும் இருந்து வருகின்றன

பைடன் ஒரு வேஷதாரி 

ஈரானுக்கு எதிராகவும் இஸ்ரேல் யுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஈரான் இஸ்ரேலுக்கு வழங்கிய பதிலடியால் இஸ்ரேல் மௌனமாகியது. உக்ரைனில் யுத்தத்தை பைடனின் அரசாங்கமே ஆரம்பித்தது. உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக ஜனாதிபதி புட்டினை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுவர வேண்டும் என பைடனுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றால், ஏன் இஸ்ரேல் பிரதமர் நடன்யாஹூவை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தவேண்டும் என தெரிவிப்பதற்குத் திராணியில்லை என கேட்கிறேம். பகலில் ஒருவேஷம் இரவில் ஒரு வேஷம் என்றே பைடன் வாழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதில் தைரியமாக துணிச்சலாக செயற்பட்டார். அதன் காரணமாக பலஸ்தீனில் வீதியொன்றில் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அதேபோன்று, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இஸ்ரேலிய நலன் பிரிவினை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தார். ஆனால் இஸ்ரேலில் இந்தளவு படுமோசமான வகையில் செயற்படும் போது அரசாங்கம் முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக செயற்பட்டு வருகிறது.

இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு எதிராக அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக இந்த சபையில் பிரேரணை நிறைவேற்றிய பின்னரும், இஸ்ரேல் தொடர்ந்தும் அட்டூழியங்களை முன்னெடுக்குமானால், எமது அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதாக அரசாங்கம் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

எனவே பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தத்தை நிறுத்துவதற்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும்   ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்பு சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பனவற்றை பயன்படுத்திக்கொண்டு அங்கு யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதுடன், யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சுயாதீன பலஸ்தீன் நாடு அமைக்கப்படவேண்டும் என்ற பிரேரணையை இந்த பாராளுமன்றம் ஊடாக முன்வைக்கிறோம் என்றார்.

- ஏ ஆர் ஏ ஹஃபீஸ் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset