
செய்திகள் தமிழ் தொடர்புகள்
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் படுகொலைக்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: ஜவாஹிருல்லா கண்டனம்
திருநெல்வேலி:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
நீண்டகால காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர். தற்போது நெல்லை மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட தலைவராகத் திறம்படச் செயலாற்றி வந்தவர்.
இரண்டாம் தேதி முதல் ஜெயக்குமார் மாயமானதாக அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்திருக்கிறார். கடந்த மாதம் ஜெயக்குமார்தனக்குக் கொலை மிரட்டல் வருவதாக காவல்துறையில் புகார் அளித்து இருந்ததாகவும் தெரிகிறது. இத்தகைய சூழலில் இன்று ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளும் என்று நெல்லை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் அவர் முன்னரே அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது காவல்துறையின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரமாக களப்பணி செய்தவர். இவரது படுகொலை விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm