நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு

பொள்ளாச்சி: 

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஒருவர் இறந்ததாக நினைத்து அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை முடித்த நிலையில், அந்த நபர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெத்தநாயக்கனூரைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் தந்தை மருதமுத்து காணாமல் போனதாக குடும்பத்தினர் தேடிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் கோட்டூர் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததையடுத்து, அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கோவை அரசு மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தை பார்த்த சிலர், அந்த நபர் மருதமுத்து என கூறியதால் காளிதாஸ் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று சடலத்தைப் பெற்றனர். முகம் மாறியிருந்ததால் அது மருதமுத்து என நம்பி உடலை கிராமத்திற்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குகளை நடத்தினர்.

ஆனால் பின்னர் உறவினர் ஒருவர் சமத்தூர் அருகே மருதமுத்து நடந்து செல்வதை பார்த்து வீடியோ எடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பியதால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில், சாலையில் உடல்நலக் குறைவு காரணமாக விழுந்த மருதமுத்து ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரியவந்தது. உடல்நலம் மேம்பட்ட பிறகு அவர் உறவினர் வீட்டிற்கு சென்றதால் குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்கவில்லை.

இதனால் உருவ ஒற்றுமை காரணமாக மற்றொருவரின் சடலம் தவறாக அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் திட்டமிட்ட தவறு எதுவும் இல்லாததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், இறுதிச்சடங்கு செய்யப்பட்ட சடலம் யாருடையது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset