நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன

சென்னை: 

அமெரிக்கா-இஸ்ரேல் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்து வருவதால் தமிழகம் முழுவதும் வர்த்தக சிலிண்டர் சப்ளை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சிறிய டீக்கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. 

சென்னையில் ஓட்டல்களில் வெரைட்டி ரைஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதியம் சாப்பாட்டிற்கு சாம்பார், ஒரு கூட்டு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. 

இன்று முதல் ஓட்டல்களில் அனைத்து உணவு சேவையும் முழுவதும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்துள்ளன. ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானும் தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து தொடர்ந்து கடுமையாக ஏவுகணை தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

ஈரான், தனது நாட்டை சுற்றியுள்ள சவுதிஅரேபியா, ஈராக், ஐக்கிய அரசு அமீரகம், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ ஏவுதளங்கள், முகாம்கள் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும், உலக நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்  ஏற்றிச் செல்லும் கப்பல்களை ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடலில் எண்ணெய் கப்பல்கள் தேங்கி நிற்கின்றன. 

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் வரமுடியாமல், ஓமன் வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இந்த அசாதாரண சூழலால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியாவில் தற்போது உள்ள இருப்பு கச்சா எண்ணெய்யை வைத்து பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பாதிப்பில்லாமல் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்களும் பார்த்து கொண்டுள்ளன. 

ஆனால், சிலிண்டர் உற்பத்தியை மேற்கொள்வதற்காக திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு மிக குறைவாகவே உள்ளது.

இந்த கச்சா எண்ணெய்யை குவைத், கத்தார், சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தநிலையில், அதன் வினியோகம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் அனுமதியுடன் ரஷ்யாவிடம் இருந்து அவசரத்திற்கு வாங்கியுள்ள கச்சா எண்ணெய் வந்தவுடன், சிலிண்டர் உற்பத்தியை பழைய நிலைக்கு கொண்டு வரும் முடிவில் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன.

இதனால் நாடு முழுவதும் உள்ள காஸ் சிலிண்டர் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்டுகளில் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் சப்ளையை முழு வீச்சில் உற்பத்தி செய்து விநியோகிக்கின்றனர். 

இந்த வீட்டு சமையல் சிலிண்டர் சப்ளையில் எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என ஒன்றிய அரசு அறிவித்ததன் பேரில், எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தீவிர கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதேவேளையில் வீட்டு சமையல் சிலிண்டர் உற்பத்தி, விநியோகத்தில் பாதிப்பு வராமல் இருக்க தற்காலிகமாக 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் உற்பத்தி, விநியோகத்தை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன. 

நாட்டின் பெரும்பாலான இடங்களில் உள்ள காஸ் பாட்டிலிங் பிளாண்டுகளில் வர்த்தக காஸ் சிலிண்டர் உற்பத்தி நேற்று முன்தினம் மதியத்திற்கு பின் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தளவில் சென்னை எண்ணூர், செங்கல்பட்டு, சேலம் கருப்பூர், ஈரோடு பெருந்துறை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய 9 இடங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாட்டிலிங் பிளாண்டுகள் உள்ளன. இதுபோக பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு 5 பாட்டிலிங் பிளாண்டுகள் இருக்கின்றன. 

இந்த பாட்டிலிங் பிளாண்டுகளில் இருந்து 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஓட்டல், பேக்கரிகளுக்கு சிலிண்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் சிறிய, பெரிய ஓட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன. உடனடியாக இந்த வர்த்தக சிலிண்டர் சப்ளையை சீர்செய்யாவிட்டால், அனைத்து நகரங்களிலும் ஓட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வர்த்தக சிலிண்டர் சப்ளை இல்லாததால், ஓட்டல்கள் மூடப்படுவதாக அறிவித்து, மூடிவிட்டனர். இதேநிலை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் முதல் ஓட்டல்களுக்கான வர்த்தக சிலிண்டர் விநியோகம் என்பது அடியோடு நிறுத்தப்பட்டது.

தற்போது இருக்கும் சிலிண்டர்களை வைத்து நேற்று உணவு பொருட்களை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர். வழக்கமாக காலை 6 மணிக்கு கடைகள் என்பது திறக்கப்படும். ஆனால், நேற்று உணவகங்கள் அனைத்தும் 7 மணிக்கு தான் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது முழுமையாக நடைபெறவில்லை. பெயரளவுக்கு தான் உணவு என்பது தயாரித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மதிய உணவில் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட பல பதார்த்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இதை அறிவிப்பாக ஓட்டல்கள் முன்பாக தொங்க விடப்பட்டுள்ள காட்சியை காண முடிந்தது. டீக்கடைகளில் பஜ்ஜி, வடை போன்றவையும் நிறுத்தப்பட்டது.

மதிய சாப்பாட்டிற்கு வழக்கமாக சாம்பார், காரக் குழம்பு, மோர் குழம்பு, ரசம், பொரியல், அவியல், அப்பளம் என்று வழங்கப்படும். ஆனால், நேற்று மதியம் சாப்பாட்டிற்கு ஒரு வகை சாம்பார், ஒரு கூட்டு மட்டுமே வழங்கப்பட்டது. வகை வகையாக சாப்பிட்டு ருசித்தவர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. கடைசியில் இதாவது மிஞ்சியதே என்று வைத்த உணவினை சாப்பிட்டு சென்றனர். தற்போதுள்ள சிலிண்டர் என்பது நேற்று இரவுடன் முடிந்து விட்டது.

அதே நேரத்தில் கடை இயங்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டது. இன்று காலைக்குள் சிலிண்டர்கள் வந்தால் தான் உணவகங்களை திறக்க முடியும். இல்லாவிட்டால் ஓட்டல்களை மூடும் நிலைக்கு கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உணவுடன் தங்கும் விடுதிகளிலும் வழங்கப்படும் உணவுகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு தங்கியுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு ஐ.டி ஊழியர்கள் விடுதி & பிஜி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகளில் டீ, காபி வழங்கப்படாது. சப்பாத்தி, தோசை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. குருமா, சாம்பார் இல்லை. சட்னி மட்டும் வழங்கப்படும். சைட் டிஷ்க்கு பதிலாக மூன்று நாட்கள் பப்ஸ் அல்லது முட்டை வழங்கப்படும். இந்த அறிவிப்பால் அங்கு தங்கியிருப்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset