நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக ஆதரவு வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் காணொலிகளை வெளியிட்டது நான்தான்: கார் ஓட்டுநர் ஒப்புதல்

 பெங்களூரு:

கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரத்தில் அவரின் காணொளிகளை வெளியிட்டது யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், ம.ஜ.த. கட்சித் தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் கடந்த 26-ம் தேதி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். 

பிரஜ்வல் ரேவண்ணாவால் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகவும், அதுகுறித்த காணொளிகள் வெளியாகியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் மீதான விசாரணைக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பித்துச் சென்றுள்ளார்

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கார்த்திக், பிரஜ்வலின் பாலியல் வன்முறை விடியோக்களை வெளியிட்டது நான்தான் என்றும் பாஜக தலைவர் தேவராஜ கௌடா பேசியதை மறுத்தும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் தேவகௌடாவின் குடும்பத்திற்கு ஓட்டுனராக பணியாற்றினேன். என்னுடைய நிலத்தை அவர்கள் அபகரித்துக் கொண்டனர். என்னுடைய மனைவியையும் அடித்து துன்புறுத்தினர். அப்போது நான் பாஜகவின் தேவராஜ கௌடாவை சந்தித்தேன். அவர் எனக்கு நியாயம் பெற்று தருவதாகக் கூறியதுடன் ஊடகங்களிடம் அறிக்கை அளிக்கச் சொன்னார். 

பிரஜ்வல் தன்னுடைய காணொளிகளை நான் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினார். நான் இந்த விவகாரம் குறித்து தேவராஜ கௌடாவிடம் விவாதித்து பிரஜ்வலின் பாலியல் வன்முறைக் காணொலிகள் அடங்கிய பென்டிரைவை (pendrive) அவரிடம் கொடுத்தேன். அவர் அதை எவ்வாறு பயன்படுத்தினார் என்று எனக்குத் தெரியாது. அதன் பின்னர் என் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. நான் காங்கிரஸிடம் அந்த பென்டிரைவைக் கொடுத்ததாகச் சொல்வது முற்றிலும் பொய்யானது. 

காங்கிரஸ் அவர்களின் கூட்டணி கட்சி என்பதால் அவர்களை நான் நம்பவில்லை. நான் தேவகௌடா குடும்பத்துடன் 15 ஆண்டுகளாக இருந்துள்ளேன். அங்கு வந்தவர்கள், போனவர்கள் என அனைத்து விவரங்களும் எனக்குத் தெரியும். நான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தருவேன்” என்று பேசியுள்ளார்.

இந்த விவகாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2000-க்கும் மேற்பட்ட விடியோக்களை பிரஜ்வால் எடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்வரும் இணைப்பை சொடுக்கினால் அவரது வாக்குமூல காணொலியைக் காணலாம். 

 https://twitter.com/i/status/1785182165652898097

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset