நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

சென்னை:

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.

தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். 

அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

அரசியல் மட்டுமல்லாமல் திரையுலகிலும் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து முத்திரை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கடந்த 1953-ம் ஆண்டு ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். 

இதற்கு ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியான முதல் படம் ‘நாடோடி மன்னன்’. இந்நிறுவனம் சார்பில் ‘அடிமை பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன.

தொடர்ந்து 1963-ல் எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் 

ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்ஜிஆரை வைத்து, ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’, ‘ரிக்‌ஷாகாரன்’, ‘இதயக்கனி’ உட்பட பல படங்களை தனது சத்யா மூவீஸ் மூலம் தயாரித்தார்.

அதேபோல, எம்ஜிஆருக்குப் பின் ரஜினியின் தொடக்க காலக்கட்டத்தில் பல்வேறு படங்களை தயாரித்து வசூலை குவித்தது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் நிறுவனம். 

1981-ல் வெளியான ரஜினியின் ‘ராணுவ வீரன்’ தொடங்கி, ‘மூன்று முகம்’, ‘தங்க மகன்’, ‘ஊர்க்காவலன்’, ‘பணக்காரன்’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களையும், கமலை வைத்து, ‘காக்கி சட்டை’, ‘காதல் பரிசு’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ‘பாட்ஷா’ படம் வெளியான சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் அதிகபட்ச வசூல் சாதனையை குவித்த படம் என்ற சாதனையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 “அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மிகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார். அவரது மறைவு, அரசியல் உலகுக்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset