நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மோடியின் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது; தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?: பாஜக மீது ஸ்டாலின் கூறிய தொடர் குற்றச்சாட்டுகள் 

சேலம்:

தமிழ்நாடு எப்போதும் புண்ணிய பூமியாகத்தான் இருக்கும். நாட்டை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் பா.ஜ.. பாவிகளின் மண்ணாக, மாறவே மாறாது. தி.மு.க. இருக்கும் வரைக்கும் உங்கள் மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

சில நாட்களுக்கு முன்னால், இதே சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் பா.ஜவுக்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து தி.மு.க.வின் தூக்கம் தொலைந்துவிட்டது” என்று பேசிவிட்டுச் சென்றார். மோடி அவர்களே, உண்மையில் உங்களால் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் யார் தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை

பத்தாண்டுகால பா.ஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினீர்களே, அந்த சாமானிய மக்கள், தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். சிலிண்டர் விலையை உயர்த்தினீர்களே, தாய்மார்கள், ஏழைகள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். 

வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களால் உழவர்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். தொழிலாளர் விரோத சட்டங்களால் பாட்டாளி மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்.

தேர்தல் பத்திர ஊழல்

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வரைக்கும் தென் மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்பதுதான் நிலைமையாக இருந்தது. தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு, வட மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறாது என்பதுதான் உண்மையான நிலைமையாக இருக்கிறது” என்று உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. இதனாலேயும், பிரதமர் மோடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றப்படுகிறார்.

பதட்டத்தில் என்ன என்ன செய்கிறார்? ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும், டெல்லியில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், கைது செய்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறையை ஏவி விட்டு, நோட்டீஸ் விடுகிறார். 

எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்த்துப் பேசினால், சி.பி.ஐ ரெய்டு விடுகிறார். ஒருசில பத்திரிகைகள் இதைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எதற்கும் பதில் இல்லை. 

ஒட்டுமொத்த இந்திய மக்களும் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த நாட்டின் நிதியமைச்சர் உட்பட முன்னணி பா.ஜ.க.வினரும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார்கள்.

பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் நிலைமை என்ன?

பெண் சக்தியைப் பற்றி சேலத்தில் பேசியிருந்தார். உண்மையில், பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் நிலைமை என்ன?. பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான காங்கிரஸ் கொண்டுவந்த நிர்பயா நிதியை முறையாக ஒதுக்காமல் விட்டது பா.ஜ.க. ஆட்சிதான். 

பா.ஜ.க. எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது, அவர்கள் போராடியது எல்லாமே பா.ஜ.க. ஆட்சியில்தான். குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மோடி ஆட்சியில்தான். மணிப்பூரில் பெண்கள் என்ன என்ன கொடுமைகளுக்கு ஆளாகினார்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் குழு சென்று பார்த்து வந்து கதறினார்களே, அந்த கொடுமைகளை எல்லாம் இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது மோடி ஆட்சிதான்.

ஜம்மு காஷ்மீரில், 8 வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு ஆதரவாக இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? உத்தரப்பிரதேசத்தில் வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்களே? 

இன்று காலை நாளேடுகளில் மோடி பேசிய பேச்சு வெளிவந்திருக்கிறது. தன்னுடைய தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். 

அகில இந்திய வானொலி

நேற்று மாலையில் இதைப் பேசிய அவர், காலையில் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? “அகில இந்திய வானொலி” என்ற தமிழ்ப் பெயரை ”ஆகாசவாணி” என்று இந்திப் பெயருக்கு மாற்றி உத்தரவு போட்டிருக்கிறார். “எங்கும் இந்தி – எதிலும் இந்தி” என்று இந்தியைத் திணிப்பதற்கான வேலைகளைக் காலை பார்த்துவிட்டு மாலையில் கண்ணீர் வடிக்கிறார். 

இதற்குத்தான் சொல்வது, மோடியின் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக்கொண்டு, மற்றொருப் பக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழ்நாட்டின் இருண்ட காலம். பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி சீரழித்த தமிழ்நாட்டை மீட்டுக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset