நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நீதிபதிக்கு சனாதானம் குறித்த புரிதல் இல்லை: அரசு வழக்கறிஞர்களுக்குமா விழிப்புணர்வு இல்லை?

தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் இளம் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசிய விவகாரத்தை  இந்துத்துவ சக்திகள், ஏதோ இந்து மதத்தை எதிர்த்து உதயநிதி பேசியது போன்ற தோற்றத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வருகின்றனர். 

இவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களே சனாதன ஒழிப்பு என்பது வர்ணாசிரம பாகுபாட்டையும், தீண்டாமையையும் ஒழிக்க ஒலித்த குரல் என்ற புரிதலின்றி, தன் கருத்துக்களை வெளிப்படுத்தி, ‘’அமைச்சர்கள் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’’ எனக் கேட்டுள்ளார்.

நீதிபதிக்கு சனாதன ஒழிப்பு குறித்த சரியான விளக்கம் அரசு வழக்கறிஞர் தந்திருக்க வேண்டும். திராவிட சித்தாந்த தெளிவில்லாதவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் போலும்.

இதனால், இந்த விவகாரம் தொடர்ந்து அகில இந்திய அளவில் பலத்த பின்னடைவை சந்தித்துக் கொண்டுள்ளது. ‘சனாதன தர்மமும், இந்து மதமும் வேறு,வேறில்லை’ என பலதரப்பட்ட *பார்ப்பன* மேதாவிகள், *பார்ப்பன அடிவருடி* அறிஞர்கள்…ஆகியோரிடம் தினமணியும், தினமலரும், இந்து தமிழ் திசையும் தொடர்ந்து கட்டுரைகள் வாங்கி பிரசுரித்தும், பேசியும் வருகின்றனர்.

உதயநிதி ஏதோ மத்தாப்பு வெடித்தது போல அதிரடியாக பேசிவிட்டு அமைதியாகிவிட்டார். திமுக தரப்பிலோ, அதன் ஆதரவு ஊடகங்களோ சனாதனிகளின் தொடர் எதிர்வினைகள் குறித்து கவலைப்படவில்லை. நியாயப்படி இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி, அகில இந்திய அளவில் டெல்லியில் முற்போக்கு அறிஞர்களை கூட்டி கருத்தரங்கங்கள் நடத்தி *சனாதனத்* தீமையை அடையாளப்படுத்தி இருக்க வேண்டும். குறிப்பாக *சனாதனத்தை* வெளியேற்றி புனரமைக்கப்பட்டதே, நவீன இந்து மதம்! அதற்கு வள்ளலார் போன்ற ஆன்மீகவாதிகளூம், காந்தியுமே பாடுபட்டுள்ளனர் என்று தெளிவுபடுத்தி இருந்தாலே போதுமானது.

இந்து மதம் என்பது வேத மரபு வந்த சனாதன மதமல்ல! இது வெகுஜன மதம்! எளியோருக்கு கருணை செய்வதே கடவுள் கருணைக்கு வழி என வள்ளலார் கற்பித்த மதம்.

வேத ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்!
வேத ஆகமத்தின் விளைவறியீர் – சூதாகச் 
சொன்னதல்லால் உண்மை உரைத்தலில்லை.
என்ன பயனோ இவை!

என இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி நமக்கு சரியாக அடையாளம் காட்டி விழிப்புணர்வு தந்துவிட்டார் வள்ளலார்.

ஒன்றை போகிற போக்கில் பேசி கடந்துவிடுவது நமக்கே எதிராகிவிடும். சித்தாந்த போராட்டம் என்பது நீண்ட நெடிய தொடர் நிகழ்வு. அதற்கு ஈடு கொடுக்காவிட்டால் நியாயங்கள் தோற்றுவிடும்.

- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset