நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்

ஐயாவின் நினைவாக அமைந்த கோட்டம்!

      அழகானத் தமிழ்போல நிமிர்ந்த கோட்டம்!

மெய்யானப் பேரன்பால் மிளிரும் கோட்டம்!

      மேலானக் காப்பியனை மெச்சும் கோட்டம்!

பொய்யாதக் குறள்போல புலவர் சீனி

       பொழுதெல்லாம் வாழ்ந்திடவே புனித நாட்டம்

எய்யாத அம்பில்லை என்றே காட்டி

       எழுச்சியிலே எழுந்துநிற்கும் இனிய கோட்டம்!

 

மொழிகற்றான் வழிகற்றான் முழுதும் கற்றான்!

      மொழிவிட்டான் வழிகெட்டான் முழுதும் கெட்டான்!

அழியாத உண்மையிதை அழுத்திச் சொல்லும்

     அறிவார்ந்த பாதையிலே ஐயா சென்றே

எழிலார்ந்த இலக்கணத்தை எளியோர் தாமும்

         எளிதினிலே கற்கின்ற இனிய வித்தை

மெழுகாகத் தனையுருக்கி மெய்யாய்த் தந்தார்!

      மேனிஉயிர் உளம்தமிழ்க்கே விரும்பித் தந்தார்!

 

சீனிநைனா முகம்மதெனும் செம்மல் பேரைச்

       சிரம்மேலே தாங்குகின்ற சிலபேர் கூடி

மாநிலமாம் பேராக்கில் மாண்பாய் கோட்டம்

      வடித்திடவும் வளர்த்திடவும் நோக்கம் கொண்டார்!

நானிலத்தில் நல்லோர்கள் பெயர்தான் வாழ

        நல்லோரே முன்னெடுப்பர் நலமாம் திட்டம்

காணுகின்றோம் நாமதனைக் கண்கூடாக

        கண்ணியர்கள் நன்முயற்சி களத்தில் வெல்க!

 

கவிஞரென,ஆசிரியர், கலைகள் கூறும்

     கருத்தான இரசிகர்,தொல் காப்பி யத்தில்

குவிந்திருக்கும் பொருட்செல்வம் கொணர்ந்து தந்த

        குலமகனார், குணவாளர், குறிக்கோள் எல்லாம்

புவிமுழுதும் நற்றமிழே புழங்க வேண்டும்

        புத்தாக்கம் பொழுதெல்லாம் புலர வேண்டும்

கவின்முறையில்  இதையெண்ணி வாழ்ந்தும் காட்டிக்

        கரைசேர்ந்த ஐயாபேர் நிலைத்து வாழ்க!

 

அ.மு.நௌஃபல்

கிள்ளான்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset