நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

மலேசிய அரசியலில் 2024 ல் அதிரடி அதிர்வு? பாஸ் உள்ளே! டி ஏ பி வெளியே! - அரசியல் கண்ணோட்டம்

கோலாலம்பூர்:

மலேசிய அரசியலில் 2024 ல் மிகப்பெரிய அதிர்வலைகள் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த மாற்றமானது பக்கத்தான் அரசியல் களத்தின் தோற்றம் புதிய மாற்றத்தை நாட்டின் அரசியலில் ஏற்படுத்தி அதன் விளவாக ஆட்சி அதிகாரத்திலிருந்து ஜனநாயக செயல் கட்சி வெளியேற்றப்படும் அல்லது தானாகவே வெளியேறும் சூழலுக்கு தள்ளப்படும். இதற்கான  நகர்வுகள் தொடங்கி விட்டன என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டி ஏ பி பக்கத்தானிலிருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் ஒற்றுமை அரசு கவிழ்ந்து விடுமே என்ற கேள்வி எழலாம். ஆனால், ஒற்றுமை அரசாங்க ஆட்சி தொடரும். அன்வார் இப்ராஹிம் தான் பிரதமராகத்தான் தொடர்வார் 

டி ஏ பியை தவிர்த்து மற்ற கட்சிகள் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் தொடர்ந்து பயணிக்கும் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. அது எப்படி முடியும் டிஏபி வெளியேற்றப்பட்டால் பெரும்பான்மை கேள்வி குறியாகுமே போன்ற ஐயங்களுக்கு விடைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

டி ஏ பி வெளியேற்றப்பட்டு அந்த இடத்திற்கு அல்லது பக்கத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவை தர பாஸ் கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கு சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் சில முக்கிய பேச்சுவார்த்தைகள் மூலம் நடந்தும் நடப்பதற்குமான அரசியல் நகர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் பதிவு செய்து வருகின்றார்கள்.

மலாய்க்காரர்களில் பெரும்பாலானோர் தற்போது பாஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களைக் கவர அன்வாரும் சில காய்களை சாதுர்யமாக நகர்த்தி வருகின்றார்.

அதில் ஒன்றுதான் அரசாங்கத்திற்கு எழுதப்படும் கடிதங்கள் மலாய் மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற உத்தரவு. அது டி ஏ பி கட்சியினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

பாஸ் கட்சி ஒற்றுமை அரசாங்கத்தோடு கூட்டு சேரும் சாத்தியம் உண்டு என்ற ஒரு கருத்து அண்மையில் பாஸ் கட்சியின்  முக்கிய தலைவர் ஒருவரால் வெளியிடப்பட்டது. ஒரிரு நாட்களுக்கு பிறகு பாஸ் கட்சியின் இன்னொரு தலைவர் பாஸ் நடப்பு அரசாங்கத்தோடு இணையாது என்று  அதற்கு மறுப்பு கூறினார்.

இது எதை காட்டுகிறது என்றால் ஒரே கட்சியை சேர்ந்த இரு தலைவர்கள் இரு கருத்துகளை ஒன்றுக்கு ஒன்று முரணாக அறிவிக்கிறார்கள் என்றால் இங்குதான் மாற்றத்திற்கான ஆரம்பமாகும். 

இப்படிப்பட்ட அறிவிப்புகள் நடப்பு அரசாங்கத்தில் ஏதோ ஒன்று நிகழப் போகிறது என்ற தகவலை முதலில் அரசியல் அரங்கில் குறிப்பாக மக்களிடையே பேசுப் பொருளாக்குவதாகும். முதல் கட்டமாக அது அரங்கேறியிருக்கிறது. 

பாஸ் கட்சியை பொறுத்தவரை அவர்களின் அரசியல் பயணத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம்.

ஒன்று தோக்குரு நிக் அஜிஸுசுக்கு முன்பு. இரண்டாவது தோகுரு ஹாடி அவாங்குக்கு பிறகு என்பதே அதுவாகும்.

பாஸ் கட்சியின் சித்தாந்தம் ஒன்றுதான். இஸ்லாமிய ஆட்சி என்பதே அவர்களின் இறுதி இலக்கு. 

ஆனால், நடப்பு அரசியல் பயணத்தில் இன்றைய பாஸ் கட்சி மிக தெளிவாகவே அரசியல் களமாடி வருகிறது. அதனை நோக்கி அழுத்தமாக நகர்ந்து வருகிறது.

இஸ்லாமிய சித்தாந்தத்தில் தெளிவாகவே இருக்கும் பாஸ் கட்சி அரசியல் ஆட்டத்தில் ஒரு முழு அல்லது பக்கா அரசியல் கட்சியாக அதன் நிலைபாடுகளும் செயல்பாடுகளும் இருக்கிறது. அதன் நகர்வுகளில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. 

ஹாடி அவாங் தலைமையிலான பாஸ் அரசியல் நலன், இன ஒற்றுமைக்காக தனது அரசியலை நிலைப்பாட்டை அவ்வப்போது மாறிமாறி தனது திசையை திருப்பிக் கொண்டே இருக்கும். தொடர்ந்து தங்களது வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

ஆனால் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்தில் அது சரியாகவே காய் நகர்த்துகிறது. அந்த நகர்வு பாஸ் கட்சிக்கு நிகர் பாஸ் பாஸ் தான். அந்த வகையில் தேசிய முன்னணி, பெர்சத்து உட்பட தனது அரசியலை பாஸ் எப்போதுமே நிலைநிறுத்திக் கொள்வதில் சமார்த்தியம் கொண்ட கட்சியாகும். 

நடந்து முடிந்த ஆறு மாநில தேர்தலில் கூட 3 மாநிலத்தை கைப்பற்றுவதில் அதன் அரசியல் சாணக்கியத்தனத்தை அவதானிக்கலாம்.

அந்த வகையில் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கும் அதற்கு முன்னதாக டி ஏ பியை அங்கிருந்து அகற்றுவதற்கும் பாஸ் முழு வீச்சாக களமாட தொடங்கி விட்டது. அன்வாருக்கு தொடர்ந்து நெருக்கதலையும் அது கொடுத்து வருகிறது.

டி ஏ பி ஏன் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்? என்ற கேள்வியும் இங்கு முக்கியமான ஒன்றுதான். டி ஏ பி கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தாலும் அது தரும் அழுத்தங்களை அன்வாரினால் தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் என்று தெரிகிறது. அதேபோல் டிஏபி உள்கட்சியிலும் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. 

அளவுக்கதிகமான எதிர்ப்பார்ப்புகளும், கோரிக்கைகளும் டி ஏ பியிடமிருந்து தொடர்ந்து பிரதமர் என்ற வகையில் அன்வாரிடம் வரும் பட்சத்தில் சமகாலத்தில் பிரதமர் டி ஏ பி மீது ஒருவித எரிச்சலை அடைந்திருப்பதும், டி ஏ பி கட்சியால் மலாய் சமூகம் ஆதரவை பக்கத்தான் ஹராப்பான் இழந்து வருகிறது என்பதையும் அன்வார் உணர்ந்து வருகிறார்.

அது மட்டுமின்றி இந்திய சமூகத்திலிருந்தும் டி ஏ பி  தனது ஆதரவை  பெருமளவு இழந்து விட்டது என்பது நடந்து முடிந்த 6 மாநில தேர்தல் முடிவுகள் வழி பகிரங்கமாகியிருப்பதையும் அன்வார் மட்டுமல்ல அரசியல் நோக்கர்கள் தெரிந்து கொண்டு விட்டனர். 

இனி டி ஏ பியின் உருட்டலுக்கெல்லாம் உருள வேண்டிய அவசியமில்லை. இருந்தால் இருங்கள் இல்லையேல் கிளம்புங்கள் என்று பக்கத்தான் ஹராப்பான் டி ஏ பியிடம் கூறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

டி ஏ பியும் இதனை மெல்ல உணர்ந்து வருகிறது. அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் பாஸ் கட்சி நாடாளுமன்ற ஆதரவை பக்கத்தான் ஹராப்பானுக்கு கொடுத்து  ஒற்றுமை அரசாங்கத்தை தொடரச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது கட்சி தாவல் சட்டத்திற்கு எதிராகாது.

இதனிடையே டி ஏ பி   பக்கத்தான் ஹராப்பானிலிருந்து வெளியேற்றப்பட்டால் அது எதிர்க்கட்சியாக மாறும் பட்சத்தில் ஒற்றுமை அரசாங்கத்தில் மலேசிய சீன சங்கம் (எம் சீ ஏ) பி கே ஆர், ஆகிய கட்சியில் உள்ள சீனத் தலைவர்கள் இடத்தை நிரப்புவார்கள். இந்திய தலைவர்கள் இடத்தை மஇகா, பிகேஆர், பாஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் அந்த இடத்தை நிரப்புவார்கள்.

அன்வாரை பொறுத்தவரை ஒரு தவணை பிரதமர் பதவியில் நீடித்து விட வேண்டும். அதற்கான அரசியல் எதுவோ அதுவே தனது இலக்காகவும் அது பாஸ் கட்சி கை கொடுப்பதும். டி ஏ பியை கைவிடும் இக்கட்டான சூழல்  வருமானால் அதனை எதிர்க்கொள்ள அவர் தயார் என்றுதான் கருத்து நிலவுகிறது. அன்வாரின் ஒவ்வொரு நகர்வும் பெரும்பான்மை சமூகத்தை திருப்திபடுத்தும் விதமாகத்தான் அமைந்துள்ளது. 

மற்றவை எதிர்வரும் பொதுத்தேர்தல் நேரத்தில் சிந்திப்போம் என்பதே இதன் பொருளாகும். இதுகூட அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்த நண்பருமில்லை என்பதே இதற்கு நியாயமாகி விடும்.

இந்த அரசியல் அதிரடி மாற்றம் ஏற்படும் போது, பாஸ் கட்சியின் முயற்சியால் பெரிக்கத்தான் நேஷனல் அல்லது பெர்சத்து கட்சியும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறும் சாத்தியம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இப்படி ஒரு அதிர்வும் மாற்றமும் எப்போது நிகழக்கூடும் என்றால் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் நடக்கலாம். மூன்றாவது மாதத்திற்குள் கட்சிகளின் தலைவர்களிடையே தீவிர பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கட்சியின் உயர்நிலை தலைவர்களின் சந்திப்பு, உச்சக்கட்ட முடிவு கூட்டறிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்படி இன்னும் சில நகர்வுகளின் காலவரம்பே 2024 செப்டம்பர் ஆகலாம். இதற்கு முன்னதாகவும் அறிவிப்பு வரலாம். 

இங்கு யார் யாருக்கு துரோகம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை.அரசியலில் துரோகம் என்ற சொல் வந்து போகும் விருந்தாளி. அரசியல் என்பதே அப்படித்தான். இந்த அரசியல் அதிர்வு எப்படி நடக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

- எம். ஏ. அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset