நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய மாணவர்களுக்குச் சுகாதார சிகிச்சை - மாலிக்கி ஒஸ்மான்

சிங்கப்பூர் :

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய 800 மாணவர்கள் சிகிச்சைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் பள்ளி, உயர்க் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் என்று சிங்கப்பூரின் இரண்டாவது கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்றும் அவர்களில் சிலர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மாணவர்களிடையே மின்சிகரெட்டுகள் பயன்பாடு மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

மின்சிகரெட்டுகள் பயன்படுத்தியதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் சுகாதார அறிவியல் ஆணையத்துக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்று தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் இவ்வாறு பதிலளித்தார். 

2020-ஆம் ஆண்டுக்கு முன்பு மின்சிகரெட்டுகள் பயன்படுத்தியதற்கான சிகிச்சைக்காக ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்தது. 

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் பழக்கம் மாணவர்களுக்கு இருப்பது மட்டுமன்றி சமூகத்தில் உள்ள மற்ற பிரிவினருக்கும் இருப்பது குறித்துக் கல்வி அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம், சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை கவலை தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரைக் கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்ற மூன்று அரசாங்க அமைப்புகளுடன் கல்வி அமைச்சு இணைந்து செயல்படுவதாக அமைச்சர் கூறினார்.

பள்ளிகளிலும் உயர்க் கல்வி நிலையங்களிலும் சோதனைகள் நடத்துவதுடன், மின்சிகரெட்டுகளால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் தீமைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தக் கவலைக்குரிய போக்கைக் களைய குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

-அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset