நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கட்டாயப்படுத்தி 7 முறை கருக்கலைப்பு செய்தார் சீமான்: புகார் அளித்த நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை: 

தன்னை கட்டாயப்படுத்தி 7 முறை கருக்கலைப்பு செய்ததாக, சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், விஜயலட்சுமிக்கு நேற்று மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கடந்த 28-ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அதில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னை திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதால், நான் யாரிடமும் கூறவில்லை. அடுத்தடுத்து 7 முறை கர்ப்பமானேன். எனது அனுமதி இல்லாமலேயே, அவர் மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார்.

மேலும், நான் சினிமாவில் நடித்து சேமித்து வைத்திருந்த ரூ.60 லட்சம் பணம் மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகளையும் பெற்றுக்கொண்டார். 

இந்நிலையில், அவர் எனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 

இதுதொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகார் தொடர்பாக சீமான் மீது 2011-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், சீமான் கட்சியை சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். 

எனவே, என் வயிற்றில் இருந்த கருவை எனது அனுமதியின்றி கருச்சிதைவு செய்ததுடன், பணம், நகைகளை பறித்துக் கொண்டு, தற்கொலைக்கு தூண்டி, என் வாழ்க்கையைச் சீரழித்த சீமான் மீதும், அவரது தூண்டுதலின்பேரில் மிரட்டும் மதுரை செல்வம் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு, காவல் ஆணையர் உத்தரவிட்டார். 

ஆனால், இந்தப் புகார்களை மறுத்த சீமான், அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் பணியில் இருந்து தன்னை திசை திருப்பி விடுவதற்காகவும் இவ்வாறு புகார்கள் தெரிவிக்கப்படுவதாக கூறியிருந்தார்.

இதற்கிடையே, சீமான் மீதான புகார் தொடர்பாக அண்ணா நகர் காவல் துணை ஆணையர் உமையாள் தலைமையிலான தனிப்படை போலீஸார், சில தினங்களுக்கு முன்னர் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து, சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சீமான் மீது தெரிவித்த புகார்களுக்கான ஆதாரங்களையும் விஜயலட்சுமியிடம் போலீஸார் பெற்றனர். 

பின்னர், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. அப்போது, சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியது.

இதற்கிடையே, சீமான் கட்சியைச் சேர்ந்தவர்கள் விஜயலட்சுமி மீது காவல் நிலையங்களில் அடுத்தடுத்து புகார் அளித்தனர். 

அதற்கு வீடியோ பதிவுகளை வெளியிட்டு, விஜயலட்சுமியும் பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை நடிகை விஜயலட்சுமியை போலீஸார் மீண்டும் அழைத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் மருத்துவப் பரிசோதனை நடத்தினர். 

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சீமான் தன்னை 7 முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார். இதன் உண்மைத் தன்மைக்காக தற்போது மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது” என்றனர்.

விஜயலட்சுமி விவகாரத்தில் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

விஜயலட்சுமி அளித்துள்ள பாலியல் புகார், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset